நாடாளுமன்ற யூ-டியூப் சேனலை முடக்கிய மர்ம நபர்கள்!

நாடாளுமன்றத்தின் சன்சத் தொலைக்காட்சியின் சமூக வலைதள யூ-டியூப் சேனல் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சன்சத் டிவியின் யூ-டியூப் கணக்கை கூகுள் நிறுவனம் சில மணி நேரம் நிறுத்தி வைத்தது.
சன்சத் தொலைக்காட்சி பெயரை “இத்ரியம்’ எனவும் அந்த மர்ம நபர்கள் மாற்றினர். “இத்ரியம்’ என்பது கிரிப்டோகரன்சி தளத்தில் இயக்கும் எண்ம செலாவணியாகும். நிகழ் நாடாளுமன்றத்தில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கப்படுவது குறித்த விவாதமும், அதற்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்ட விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் சன்சத் தொலைக்காட்சிக்கு குறிவைக்கப்பட்டு இந்த கிரிப்டோகரன்சி தளம் சம்பந்தப்பட்ட பெயர் வைக்கப்பட்டு இந்த இணையதள தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து சன்சத் தொலைக்காட்சி சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கை:
பிப்ரவரி 15-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் சில அடையாளம் தெரியாத நபர்கள், சன்சத் தொலைக்காட்சியின் யூ-டியூப் சேனலில் ஊடுருவி “ஹேக்’ செய்துள்ளனர். இப்படி ஊடுருவியர்கள் சன்சத் யூ-டியூப் சேனல் பெயரையும் மாற்றினர். “இத்ரியம்’ எனப் பெயரை மாற்றினர். இருப்பினும், சன்சத் தொலைக்காட்சியின் சமூக வலைதளக் குழுவினரால் அதிகாலை 3.45 மணியளவில் சேனல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து சன்சத் தொலைக்காட்சி நிறுவனம் இந்தியாவின் இணைய பாதுகாப்பு சம்பவங்களுக்கான பொறுப்பு அமைப்பான சிஇஆர்டி-ஐஎன்-க்கு புகார் அளித்து உஷார் படுத்தியுள்ளது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து சன்சத் டிவி-யின் யூ-டியூப் பக்கத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை நிரந்தரமாகத் தீர்க்க யூ-டியூப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சன்சத் தொலைக்காட்சியின் யூ-டியூப் பக்கம், விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மர்ம நபர்களின் அத்துமீறிய நடவடிக்கையைத் தொடர்ந்து, சன்சத் தொலைக்காட்சியின் யூ-டியூப் பக்கம் சில மணிநேரம் முடக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது. நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையில் நடைபெறும் நிகழ்வுகளை சன்சத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. இந்த நேரடி நிகழ்ச்சிகள் சன்சத் யூ-டியூப் சேனலிலும் ஒளிபரப்பப்படுகிறது. மக்களவை, மாநிலங்களவை என தனித்தனியாக இருந்த சேனல்கள் கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இல்லாத நாள்களில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், விவாதங்கள் ஆகியவற்றையும் சன்சத் சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.