வன்னியருக்கு 10.5 % உள்ஒதுக்கீடு விவகாரம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீது தகுதி அடிப்படையில் விசாரணை
கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் புதன்கிழமை 2-ஆவது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மாநிலச் சட்டத்தின் செல்லுபடித் தன்மை குறித்த மனுக்களை அரசியல்சாசன அமர்வு விசாரணைக்குப் பரிந்துரைக்கும் வாதங்களை விரும்பவில்லை என்றும், இந்த வழக்கை தகுதியின்அடிப்படையில் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கும் மாநிலச் சட்டம் செல்லத்தக்கதல்ல என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், புதன்கிழமையும் இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த விவகாரத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளை ஆய்வு செய்தோம். இதை அரசியல்சாசன அமர்வால் பரிசீலிக்கப்படும் தேவை எழவில்லை என்று கருதுகிறோம். அதுபோன்று அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்ற வாதங்களை விரும்பவில்லை. தகுதியின் அடிப்படையில் விசாரிக்க உள்ளதால் சம்பந்தப்பட்ட தரப்பினர் வாதங்களை முன்வைக்கலாம்’ எனத் தெரிவித்தது.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, பி.வில்சன், முகுல் ரோத்தகி, கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் டி.குமணன், மனுதாரர் சி.ஆர். ராஜன் தரப்பில் சி.எஸ். வைத்தியநாதன், பாமக தரப்பில் எம்.என்.ராவ், வழக்குரைஞர்கள் தனஞ்ஜெயன், கே.பாலு உள்ளிட்டோரும் ஆஜராகினர்.
மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி, இந்திரா சாஹ்னே, இ.வி.சின்னையா, தவேந்தர் என பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கொள்காட்டி வாதிட்டார்.
அவர் கூறுகையில் “தமிழக அரசின் 2021-ஆம் ஆண்டு உள்ஒதுக்கீடு சட்டமானது, அதன் 1994-ஆம் ஆண்டுச் சட்டத்தில் இருந்து வேறுபடவில்லை. அந்தச் சட்டத்தின் பிரிவு 7, இதுபோன்ற உள்ஒதுக்கீட்டு சட்டத்தை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த 2021 சட்டமானது தகுதிக்குரியதாகும். இது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. 1994 சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதால் அதன் நீட்சியாக உள்ள இந்தச் சட்டத்துக்கு தனியாக ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. மேலும், இ.வி.சின்னையா வழக்கை இந்தச் சட்டத்துடன் உயர்நீதிமன்றம் ஒப்பிட்டிருப்பது தவறாகும். அந்த வழக்கு எஸ்.சி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்புடையதாகும். இந்தச் சட்டமோ மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான உள்ஒதுக்கீடு தொடர்புடையதாகும். தற்போதைய வழக்கானது சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரை (எஸ்இபிசி) அடையாளம் காண்பதோ அல்லது அவர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பானது அல்ல. இந்த வன்னியர்குல சத்திரிய சமூகமானது, ஆரம்பித்தில் இருந்தே ஓபிசி பட்டியலில் இருந்து வருகிறது. தற்போதைய சட்டமானது மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடாகும்’ என்றார். இதைத் தொடர்ந்து, மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, “இந்த உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டமானது 102, 105 அரசமைப்புச் சட்டத் திருத்தங்களுக்குப் பொருந்தாது’ என்றார்.
பாமக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எம்.என்.ராவ் முன்வைத்தவாதம்: வன்னியகுல சத்திரியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை,பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது. 1983-ஆம் ஆண்டில் அம்சா சங்கர் ஆணையத்தால் கணக்கிடப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் சமூகங்களின் மக்கள்தொகை குறித்த போதிய அங்கீகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மட்டுமே 2021-ஆம் ஆண்டில் தமிழக அரசு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றியது.
1983-இல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மக்கள்தொகையில் வன்னியர் சமூகத்தினர், மக்கள்தொகையில் 13.1 சதவீதமாக உள்ளனர். ஆனால், 10.5 சதவீதம் வரை மட்டுமே அச்சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தினர் வட மாவட்டங்களில் அதிகமாக உள்ளனர். தென் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களின் வாழ்க்கைத் தரம் கல்வி ரீதியிலும், சமூக ரீதியிலும் மேம்படவில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இணையாகவே நடத்தப்பட்டனர். வன்னியர் குல சத்திரிய பிரிவில் மட்டுமே 7 சாதிகள் உள்ளன. உரிய தரவுகளின் அடிப்படையில்தான் இந்த உள்ஒதுக்கீடு இந்தச் சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “இதுபோன்ற உள்ஒதுக்கீடு சட்டத்தை இயற்றும் முழு அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உள்ளது. 102-ஆவது அரசியலமைப்புச்சட்டத் திருத்தமானது, சட்டம் உருவாக்கும் மாநில சட்டப்பேரவையின் உரிமையைப் பறிக்கவில்லை. 2018-ஆம் ஆண்டின் 102-ஆவது சட்டத் திருத்தமானது தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்துக்கு அரசியலமைப்புச்சட்ட செல்லுபடித் தன்மையை வழங்கியுள்ளது. 105-ஆவது அரசியலமைப்புச்சட்டத் திருத்தமும், மாநிலங்களுக்குரிய குறிப்பிட்ட எஸ்இபிசி வகுப்பினரை அடையாளம் காணும் அதிகாரத்தை மீட்டெடுத்துள்ளது’ என்றார்.
வழக்கின் வாதங்களைத் தொடரும் வகையில் விசாரணையை வரும் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற அமர்வு பட்டியலிட்டது.