இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறு நாள் நடைபெற உள்ளது. மாகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12 ஆயிரத்து 604 வார்டு பதவி இடங்களை நிரப்புவதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டுகளை சுற்றி, சுற்றி வந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் போல சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதி வீதியாக சென்று மக்களிடம் தங்களின் வாக்குறுதிகளை கூறி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதன்பிறகு வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள், ஆலோசனைகள் பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.