கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பலி: திருமண வீட்டில் ஏற்பட்ட சோகம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து குஷிநகர் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறியதாவது:
குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா பகுதியில் புதன்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சில பெண்கள் அங்குள்ள கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடியின் மீது அமர்ந்திருந்தனர்.
அதிகளவிலான பாரம் தாங்காமல் இரவு 8.30 மணியளவில் கிணற்றின் இரும்பு மூடி உடைந்து விழுந்ததில் நீரில் மூழ்கி 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
திருமண வீட்டில் ஏற்பட்ட இந்த சம்பவம் குஷிநகர் மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.