எஸ்.ரி.எப். அதிரடி வேட்டை! – 15 பேர் கைது.

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 6 மதுபானச் சுற்றிவளைப்புகளில் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 76 லீற்றர் மதுபானம், 685 லீற்றர் கோடா, ஒரு செப்புத் தகடு, 04 இரும்பு பீப்பாய்கள் என்பவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா, வத்தளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 140 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொட்டுகொட மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 34 வயதுகளையுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகண பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, கெசல்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 9 ஆயிரத்து 400 புகைத்தல் பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா, பொகவந்தலாவை பிரிவுக்குட்பட்ட செப்பல்ட்டன் சந்தி பிரதேசத்தில் லொறியொன்றில் 2 ஆயிரத்து 83 கிலோகிராம் கழிவுத் தேயிலையைக் கொண்டு சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கழிவுத் தேயிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36, 37 வயதுகளையுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா, கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரைப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொஸ்கம, புவக்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 35, 52 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.