குமுளமுனை மகாவித்தியாலய பழைய மாணவ நெற்செய்கை குழுவின் பாராட்டு விழா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுளமுனை மகாவித்தியாலய பழைய மாணவ நெற்செய்கை குழுவினால் வறுமைப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் நோக்கில் கிராம விவசாயிகளின் ஒப்பற்ற உதவியோடு 2021ம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையில் நெல் பயிரிடப்பட்டு பதின்நான்கு இலட்சம் ரூபாய் நிதி பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் கணக்கிற்கு வைப்பிலிட்டு ஒப்படைக்கும் நிகழ்வும் குறித்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த கிராம நல்லுள்ளங்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று(16) காலை 9.30மணிக்கு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் சிறப்புற நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம். உமாமகள் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக பாடசாலை அதிபர் ச.ஜெயவீரசிங்கம், கற்பகவிநாயகர் ஆலயத்தின் பிரம குரு ஸ்ரீ.திருஞ்ஞானசம்பந்த குருக்கள் அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் குமுளமுனை கமநல அபிவிருத்தி நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேசசபை உறுப்பினர், கமக்கார அமைப்பின் தலைவர்கள், கிராம உத்தியோகத்தர், கால்நடை அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், ஊர்வாழ் உறவுகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.