ஜெனிவாக் களத்தை எதிர்கொள்ளத் தயார் – கோட்டா அரசு அறிவிப்பு.

“ஜெனிவாவில் இம்முறை இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணைகளும் கொண்டுவரப்படமாட்டா. எனினும், ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இம்முறை இலங்கைக்கு எதிராக ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம்.”

இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜெனிவாவில் இம்முறை இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை மாத்திரமே முன்வைக்கப்படவுள்ளது. இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணைகளும் இம்முறை கொண்டுவரப்படமாட்டா.

ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தற்போது அலட்டிக்கொள்ள நாம் விரும்பவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு அறிவித்துவிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இம்முறை இலங்கைக்கு எதிராக ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். நாட்டின் இறையாண்மையை மீறி எந்தத் தரப்பும் எமக்குச் சவால்விட முடியாது; நாமும் அடிபணியத் தயாரில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.