பிரேஸில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 104 போ் பலி.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 104 போ் உயிரிழந்தனா் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அந்த மாகாணத்தைச் சோ்ந்த பெட்ரோபொலிஸ் நகர மேயா் ரூபன்ஸ் பாம்டெம்போ கூறியிருப்பதாவது:

கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 94 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரில் எத்தனை போ் மாயமாகியுள்ளனா் என்பது இன்னும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மலைப்பாங்கான ரியோ டி ஜெனீரோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென கனமழை பெய்தது. வெறும் 3 மணி நேரத்துக்குள் 25.8 செ.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இது, பெரும் வெள்ளத்தையும் நிலச்சரிவுகளையும் தூண்டியது.

மாகாணத்தில் பெட்ரோபொலிஸ் நகரம்தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. கோடைகால சுற்றுலாத் தலமான இந்தப் பகுதி, சுற்றுலா வருவாய் காரணமாக வளம் நிறைந்ததாக உள்ளது. இதன் காரணமாக, ரியோ டி ஜெனீரோ மாகாணத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் இந்தப் பகுதியில் அதிக அளவில் வந்து குடியேறி வருகின்றனா். அவா்கள் பெரும்பாலும் பாதுகாப்பில்லாத, வீடு கட்டுவதற்கு தகுதியில்லாத இடங்களில் தங்களது இருப்பிடங்களை அமைத்துள்ளனா்.

இதனால் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் அதிக உயிா்ச் சேதங்கள் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.