புதிய டெல்டக்ரான் வைரஸ்: பிரிட்டனில் பாதிப்பு அறிகுறி.

பிரிட்டனில், கொரோனா வைரசின் உருமாறிய, ‘டெல்டக்ரான் வைரஸ்’ பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய வைரஸ் பரவல் குறித்து ஆய்வு செய்வதாக, பிரிட்டன் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் உருமாறிய ‘டெல்டா’ வைரஸ், உலகளவில் இரண்டாவது அலையாக பரவி, பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கொரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ், மூன்றாவது அலையாக பரவி உலகை வாட்டி வருகிறது. இந்நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்கள் இணைந்த, ‘டெல்டக்ரான்’ எனும் உருமாறிய கொரோனா வைரஸ், தற்போது பிரிட்டனில் பரவ தொடங்கியுள்ளது.

ஐரோப்பிய நாடான சைப்ரசில் உள்ள பல்கலையில், ஆராய்ச்சியாளராக உள்ள லியோனிடாஸ் கோஸ்ட்ரிக்ஸ் என்பவர் தலைமையிலான குழு, 2021 இறுதியில் டெல்டக்ரான் வைரஸ் பாதிப்பை, முதன் முதலாக கண்டறிந்தது. இந்நிலையில், டெல்டக்ரான் வைரஸ் பிரிட்டனில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்ய, பிரிட்டன் சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வில், டெல்டக்ரான் குறித்த விபரங்கள் தெரியவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.