அமெரிக்க புதிய தூதுவர் அடுத்தவாரம் முதல் கடமைகள் ஆரம்பம்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார்.
அவர் தனது நற்சான்றிதழ்களை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அரசாங்கத்திடம் கையளிப்பார் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒருங்கிணைப்பாளருக்கான தலைமைப் பணியாளராகவும் இருந்தார்.
கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ள அவர், கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரப் பள்ளியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 10ம் திகதி ஜூலி சுங் இலங்கைக்கான தூதுவராக பிரதி இராஜாங்க செயலாளர் வெண்டி ஆர். ஷெர்மனால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.