ஆப்கானிஸ்தானில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்பு.
ஆப்கானிஸ்தானில் தெற்கு ஜாபுல் மாகாணத்தில் கடந்த நான்கு நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
ஹைதர் என்ற ஆறு வயது சிறுவனை மீட்கும் பணியில் பல மணி நேரமும் பணியாற்றிய மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரை வெளியே கொண்டு வந்தனர்.
எனினும் இந்த சிறுவன் வெளியே எடுக்கப்பட்டபோது, சிறுவன் பதிலளிக்கவில்லை என்றும் மூச்சு விடவில்லை என்றும் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை முதல் கிணற்றில் இருந்து சத்தம் எதுவும் வரவில்லை என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறுவனை அடைவதற்காக மீட்புக் குழுவினர் தரையில் பள்ளம் ஒன்றை தோண்டியே அவரை அடைந்தனர்.
இதனையடுத்து அவர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக உலங்கு வானுார்தி மூலம் காபூலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட இருந்தார்.
எனினும் மீட்கப்பட்ட அவரை மருத்துவக் குழுவினர், உலங்கு வானுார்தியில் ஏற்றிச் செல்ல முயன்றபோது அவர் உயிருடன் இருக்கவில்லை.
கடந்த செவ்வாயன்று குறித்த 25 மீ (33 அடி) கிணற்றில் ஹைதர் என்ற இந்த சிறுவன் வீழ்ந்தார்.
இதனையடுத்து மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது “நல்லா இருக்கிறாயா மகனே?” “என்னுடன் பேசுங்கள், அழாதீர்கள், உங்களை வெளியேற்ற நாங்கள் வேலை செய்கிறோம்.” என்று சிறுவனின் தந்தை கூறியபோது “சரி, நான் தொடர்ந்து பேசுகிறேன்,” என்று சிறுவன் பதிலளித்தான்.
இருப்பினும், கிணற்றில் சிக்கிக்கொண்டதில் இருந்து சிறுவனின் நிலை மோசமடைந்ததாக கூறப்பட்டது.
ஏற்கனவே மொராக்கோவில் ஒரு சிறுவன் நான்கு நாட்கள் கிணற்றில் சிக்கி இறந்த இரண்டு வாரப்பகுதிலேயே ஆப்கானிஸ்தானில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.