நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022: வாக்குப் பதிவு தொடங்கியது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையின் போது 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் – ஒழுங்கை பேணி காக்க 1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
268 வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரில் மட்டும் 2,723 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதித்த நபர்கள் மட்டும் வாக்களிக்கலாம் எனவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணிக்கு மேல் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.