திமுகவின் உபகுழுவாக தமிழக மகளிர் ஆணையம்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றச்சாட்டு
திமுகவின் மற்றொரு உபகுழுவாக தமிழக மகளிர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழக மகளிர் ஆணையத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தில் திமுகவினருக்கு அதிகளவில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் இச்சூழலில் கடந்த 10 ஆண்டு காலமாக முறையாக செயல்படாத மாநில மகளிர் ஆணையத்தை திமுக அரசு மாற்றி அமைத்துள்ளது என்ற செய்தி ஒரு நொடி மகிழ்வைத் தந்தது.
அதன் உறுப்பினர்கள் பட்டியலை பார்த்த உடன் அந்த மகிழ்ச்சி ஒரு நொடியில் பறந்து போனது. அதனுடைய தலைவராக ஏ.எஸ்.குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த அதிகாரியாவார்.திருமிகு மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், சிவகாமசுந்தரி, வரலட்சுமி மற்றும் ராணி ஆகிய 7 பேர் மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் ஆணையத்தின் தலைவரை தவிர மற்ற அனைவரும் திமுகவின் உறுப்பினர்கள்.
கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் மிக மோசமாக நடந்த காலத்தில் இந்த மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்கள் ஒருவர் கூட அதற்கு எதிராக சட்ட போராட்டத்தையோ சமூகப் போராட்டத்தை நடத்தியவர்கள் இல்லை.குறிப்பாக திருமிகு மாலதி நடராஜன் திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். திருமதி கீதா நடராஜன் ஈரோடு மாவட்டத்தின் திமுக மாவட்ட துணை செயலாளர் .
திருமிகு சீதாபதி கடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் நிறுத்தப்பட்ட திமுக வேட்பாளர். திருமிகு பவானி ராஜேந்திரன் திமுகவின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர். சிவகாமசுந்தரி, வரலட்சுமி ஆகிய இருவரும் திமுகவின் எம்எல்ஏக்கள். திருச்சியைச் சேர்ந்த ராணி என்பவர் திமுகவின் உறுப்பினர்.
இதில் மகளிர் ஆணையத்தின் தலைவரை தவிர மற்ற அனைவரும் திமுகவின் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர்கள், திமுகவால் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாதவர்கள் என்பது கேலிக்கூத்தானது. ஒட்டுமொத்தமாக இந்த ஆணையம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறையை தடுக்கும் ஆணையமாக நிச்சயம் செயல்பட முடியாது. இது திமுகவின் ஒரு உபகுழுவாக மட்டுமே செயல்படமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.