முல்லை பெரியாறில் புதிய அணையைக் கட்ட கேரளம் உறுதி

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணையைக் கட்ட கேரளம் உறுதி கொண்டுள்ளதாக சட்டப்பேரவை ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை கேரள பகுதியில் உள்ளபோதிலும் அதை தமிழக அரசே நிா்வகித்து வருகிறது. தமிழகத்தின் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீா்ஆதாரமாக அந்த அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அந்த அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்பட வேண்டுமென கேரள அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தற்போதைய அணையே வலிமையாக பாதுகாப்புடன் உள்ளதெனத் தெரிவித்து வரும் தமிழக அரசு, புதிய அணையைக் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளுக்கும் தொடா்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் ஆளுநா் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பேரவையில் உரையாற்றிய மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான், ‘‘தமிழக மக்களுக்கு முல்லைப் பெரியாறு நீரை வழங்க கேரளம் உறுதி கொண்டுள்ளது. அதே நேரத்தில், கேரள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே 125 ஆண்டுகள் பழைமையான அணை உள்ள பகுதியில் புதிய அணையைக் கட்ட வேண்டுமென கேரள அரசு வலியுறுத்துகிறது. அப்பகுதியில் புதிய அணையைக் கட்ட அரசு உறுதி கொண்டுள்ளது’’ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.