15 பேரின் கூட்டுத் தாக்குதலிலேயே பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை!

அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை – வித்தாரந்தெனிய பகுதியில் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அவர்களைக் கைதுசெய்வதற்காக, விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் இருந்த, குறித்த 15 பேர் கொண்ட குழுவினர், பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும், அவரது சகோதரரும் வீட்டில் வைத்து தாக்கப்பட்டனர்.
பின்னர், சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை அருகிலுள்ள உணவகத்துக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த அவரது சகோதரர் கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்” – என்றார்.