அகமதாபாத் குண்டுவெடிப்பு: தண்டனையைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த முக்கிய குற்றவாளி
அகமதாபாதில் 2008-ஆம் ஆண்டு நடந்த தொடா் குண்டுவெடிப்புகள் தொடா்பான வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் (ஐஎம்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 38 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது; 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 7,000 பக்கங்கள் கொண்ட இந்தத் தீா்ப்பு குண்டுவெடிப்பு நிகழ்ந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே இந்த வழக்கில்தான், மிக அதிக குற்றவாளிகளுக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை வழக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2008 அகமதாபாத் தொடர் குண்டுவெப்புச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி தௌஷிப் பத்தான் பிகார் மாநிலம் கயாவிலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கணொலி வாயிலாக நேற்றைய விசாரணையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கயா மத்திய சிறைச்சாலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரை காவலர்கள் தொடர்ந்து காண்காணித்துக் கொண்டிருப்பதாக சிறைத் துறை கண்காணிப்பாளர் விஜய் குமார் அரோரா தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வாசித்தபோது, அதனை காணொலி காட்சி வாயிலாக குற்றவாளி தௌஷிப் பத்தானும் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டதும், அதைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தார். பிறகு, வாய்க்குள்ளேயே முணுமுணுத்தபடி இருந்தார். அங்கே அவருக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுட்டிருந்த காவலர்களுக்குக் கூட அவர் என்ன சொல்கிறார் என்பது கேட்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, அங்கிருந்து தப்பி கயாவுக்கு வந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தார் பத்தான். அங்கு ஒரு வாடகை வீட்டில் சில மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில், பிறகு, வெளியே வந்து, தனது சிமி இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்த போது கைது செய்யப்பட்டார்.
ஒரே வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனையை தமிழகத்தில் தடா நீதிமன்றம் கடந்த 1998-ஆம் ஆண்டில் வழங்கியிருந்தது.
குஜராத்தின் அகமதாபாதில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி அடுத்தடுத்து 21 இடங்களில் குண்டு வெடித்தது. சுமாா் 70 நிமிஷங்களில் நடந்த இந்தக் குண்டுவெடிப்புகளில் 56 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக அகமதாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சோ்ந்த 78 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஒருவா் அரசுத் தரப்பு சாட்சியமாக மாறியதால் 77 போ் மீது விசாரணை நடத்தப்பட்டது. அவா்களில் 49 பேரைக் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி அறிவித்தது. 28 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனையை சிறப்பு நீதிபதி ஏ.ஆா்.படேல் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 11 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அபராதமும் இழப்பீடும்: இந்த வழக்கை அரிதிலும் அரிது என நீதிபதி குறிப்பிட்டுள்ளாா். வழக்கின் குற்றவாளிகள் 48 பேருக்கு ரூ.2.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொருவருக்கு ரூ.2.88 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பலத்த காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 இழப்பீடும், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.25,000 இழப்பீடும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றப் பிரிவுகள்: மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களில் முக்கிய சதிகாரா்களான சஃப்தாா் நகோரி, கமருதீன் நகோரி உள்ளிட்டோா் வெடிகுண்டுகளை வாங்குவதற்காக நிதியைத் திரட்டினா். மேலும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான நடவடிக்கைகளிலும் அவா்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலை, குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2002-ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்துக்கு பழிவாங்கும் வகையில் ஐஎம் அமைப்பினா் இந்த தொடா் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக காவல் துறையினா் கூறியிருந்தனா்.
முதல் முறை: குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவா்கள் அனைவரும் பல்வேறு சிறைகளில் இருந்தபடி காணொலி வாயிலாக தீா்ப்பைக் கேட்டறிந்தனா். இந்த வழக்கின் விசாரணையைக் கடந்த 2010-ஆம் ஆண்டில் இருந்து 9 நீதிபதிகள் கண்காணித்து வந்தனா். வழக்கு விசாரணையைத் தொடங்கிய நீதிபதி பெலா எம்.திரிவேதி, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளாா்.
அரசுத் தரப்பு வழக்குரைஞா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஒரே வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் ஒரே வழக்கில் அதிகபட்சமாக 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 4 போ் மீது தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றாா்.
தீா்ப்புக்கு வரவேற்பு: தொடா் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவா்களும், உயிரிழந்தவா்களின் உறவினா்களும் சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்றுள்ளனா். இது தொடா்பாக, 9 வயதில் குண்டுவெடிப்பில் காயமடைந்து தற்போது கல்லூரியில் பயின்று வரும் யாஷ் வியாஸ் கூறுகையில், ‘‘என் தாயாரும் நானும் கடந்த 13 ஆண்டுகளாக இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம். என் தந்தை உள்பட அப்பாவி மக்களைக் கொன்ற 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றாா்.