அமெரிக்காவில் கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கான தடை நீக்கம்..!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இதன் அவசர பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனமும் அனுமதி அளித்துள்ளது.
ஆனால் இந்த தடுப்பூசியை அமெரிக்கா இன்னும் ஏற்கவில்லை. அங்கு 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் கோவேக்சின் இருந்தபோது, இந்த பரிசோதனைகளுக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எப்.டி.ஏ. கடந்த நவம்பர் மாதம் தடை விதித்தது.
இந்த தடை தற்போது விலக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசியின் பரிசோதனை நடவடிக்கைகள் மீண்டும் தொடர்வதுடன், பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பும் ஏற்பட்டு உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கோவேக்சினை பிபிவி152 என்ற பெயரில் அமெரிக்காவில் தயாரித்து வரும் ஆகுஜன் நிறுவனம் இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர் முசுனரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவேக்சினுக்கான எங்கள் மருத்துவத் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் ஒரு மாற்று தடுப்பூசியை வழங்குவதில் எங்களை மேலும் நெருங்கச் செய்யும் என்று நம்புகிறோம்’ என குறிப்பிட்டு உள்ளார்.