கடைசி நிமிடத்தில் ஓட்டு போட்ட எஸ்.ஐ – பணியில் இருந்தபோது சீருடையிலேயே வாக்களிப்பு.
விளாத்திகுளம் பேரூராட்சியில் கடைசி நிமிடத்தில் ஜனநாயக கடமை ஆற்றிய உதவி ஆய்வாளர் பணியில் இருந்தபோது சீருடையிலேயே வந்து வாக்களித்து சென்றார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனையடுத்து விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில், மாலை 5 மணியளவில், பணியில் இருந்த எட்டையபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் என்பவர் கடைசி நிமிடத்தில் வாக்களிக்க வந்ததால் முதலில் தேர்தல் அலுவலர்கள் உதவி ஆய்வாளர் முருகனை வாக்களிப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது எனக்கூறி வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மேலதிகாரிகளின் அறிவிப்பின்படி, கொரோனா தொற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாலை 5 மணி முதல் 6 மணி வரை பொது வாக்காளர்களும் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் உதவி ஆய்வாளர் முருகன் 11வது வார்டில் உள்ள தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தனது வாக்கினை செலுத்திச் சென்றார்.
மேலும் உதவி ஆய்வாளர் முருகன் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட வேறு வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என எண்ணி 2 முறை முயற்சித்து தனது வாக்கினை செலுத்தி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தையும், தான் சிறந்த குடிமகன் என்பதையும் உணர்த்தி உள்ளார். காவல் பணியில் உள்ள இவருக்கு தபால் வாக்கு அளிக்கப்படாத காரணத்தினால் தான் இவர் வாக்குச்சாவடி மையத்திற்கு பணியில் இருக்கும் போதே சீருடையில் நேரில் வந்து வாக்கு செலுத்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.