பஞ்சாப், உபியில் இன்று தேர்தல்: சரண்ஜித் சிங் சன்னி, அகிலேஷ் யாதவுக்கு பலப்பரிட்சை
பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாகவும் உத்தரபிரதேசத்தில் மூன்றாவது கட்ட தேர்தலும் நடைபெறுகிறது.
117 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் 59 தொகுதிகளுக்கு இன்று மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பஞ்சாபில் காலை 8மணி முதல் மாலை 6 மணிவரையும் உத்தரப் பிரதேசத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பஞ்சாம் மாநிலத்திற்கு கடந்த 14ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 16ம் தேதி குரு ரவீந்திரதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாபிலிருந்து வாரணாசிக்கு ஏராளமானோர் செல்வார்கள் என்பதால் தேர்தல் தேதி இன்று ஒத்தி வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் தேர்தலில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என இரு மாநிலங்களையும் சேர்த்து பிரகாஷ் சிங் பாடல், கேப்டன் அமரீந்தர் சிங், அகிலேஷ் யாதவ் என மூன்று முதலமைச்சர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், பஞ்சாபில் முதல் தலீத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னி தேர்தலில் வெற்றி பெற்று தனது முதல்வர் பதவியை தக்க வைக்கப்பாரா என்றும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபை பொறுத்தவரை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி, சிரோமணி அகாலி தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமாஜ்வாதி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2017 சட்டமன்றத் தேர்தலில், இந்த 59 இடங்களில் பாஜக 49 இடங்களைப் பெற்றது, சமாஜ்வாதி கட்சி 9 இடங்களில் வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்தையும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி (பிஎஸ்பி) அனைத்து இடங்களையும் இழந்தது.