வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்: முழுமையாக கைப்பற்றியது இந்தியா..!
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதில் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் கெய்வாட் 4 ரன்களில் அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இஷான் கிஷன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் (25), நடுவரிசையில் இறங்கிய கேப்டன் ரோகித் 7) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து சூரியகுமார் யாதவும், வெங்கடேஷ் அய்யரும் இணைந்து அதிரடியுடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக சூரியகுமார் யாதவ் 7 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்தார். வெங்கடேஷ் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் டொமினிக் டிரேக்ஸ், ஹேடன் வால்ஷ், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியொர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல் மேயர்ஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் களமிறக்கினர். இந்த ஜோடியில் மேயர்ஸ் 6 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ஷாய் ஹோப் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நிகோலஸ் பூரனுடன் ரோவன் பவல் ஜோடி சேர்ந்தார். பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பவல் 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பொல்லார்டு 5 ரன்களும், ஹோல்டர் 2 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 12 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 61 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ரொமாரியோ ஷேப்பர்டு 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிரேக்ஸ் 4 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் பேபியன் ஆலன் 5 ரன்களும், ஹெய்டன் வால்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை முழுமையாக வென்றது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷ் பட்டேல் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.