வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது அரசின் பொறுப்பு!

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியது தற்போதைய அரசின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்., வடமராட்சி, உடுப்பிட்டியில் (20) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளை விட ஒரு சிறந்த கட்சி. எமது கட்சியில் சிறியவர், பெரியவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை.

எங்களது சுதந்திரக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கின்றது. வரலாற்றில் ஒரு முக்கியமான விடயமாகும். அதற்கு நான் அனைத்து உடுப்பிட்டித் தொகுதி மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்தோடு எதிர்வரும் காலத்தில் மாகாண சபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போதும் எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கு அதிகளவில் மக்கள் ஆதரவளிக்க வேண்டும். எமக்கு ஆதரவு அளித்தால் நல்ல நிலைக்கு எமது கட்சியை முன்நோக்கிக் கொண்டு செல்வோம்.

நாட்டில் தற்போது மக்கள் அதிகளவு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றார்கள். எரிவாயு, பசளை, அத்தியாவசியப் பொருள் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்கின்றார்கள். அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வட பகுதியில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். காணி விடுவிப்பு மற்றும் வீதி புனரமைப்பு போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திகளை எனது ஐந்து வருட ஆட்சியில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுத்திருந்தேன்” – என்றார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தொழில்‌ அமைச்சர்‌ நிமல் சிறிபால டி சில்வா, பற்றிக்‌ கைத்தறி துணிகள்‌ மற்றும்‌ உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர்‌ தயாசிறி ஜயசேகர, சூரிய சக்தி காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், சாந்த பண்டார உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.