திருவான்மியூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த திமுக பிரமுகர் உட்பட இருவர் கைது!
சென்னை திருவான்மியூர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி மையத்தில் கத்தியுடன் சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் திமுக பிரமுகர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 19) அன்று நடைபெற்றது. இதில் சில இடங்களில் மட்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது. திருவான்மியூர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை திமுக பிரமுகர் சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டும் வந்தன.
சென்னை ஒடைக்குப்பம் 179வது வார்டு பகுதியில் அ.தி.மு.க. சார்பாக ஜமுனா கணேசனும், தி.மு.க. சார்பில் கயல்விழி என்பவரும் போட்டியிட்டனர். இந்த நிலையில் வாக்குப்பதிவின் போது கதிர் என்ற தி.மு.க பிரமுகர், கயல்விழியின் கணவர் ஜெயக்குமார் மற்றும் அடியாட்களுடன் வந்து வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து திருவான்மியூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். கதிர் என்கிற கதிரவன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில், இருவரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அரசாங்க சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அசம்பாவித சம்பவங்கள் மற்றும் குளறுபடி ஏற்பட்ட 5 வார்டுகளுக்கு உட்பட்ட 7 வாக்குச்சாவடிகளில் தற்போது மறுவாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கிறது.