கோட்டாவில் ஆற்றில் காா் கவிழ்ந்து 9 போ் பலி: மோடி நிதியுதவி அறிவிப்பு

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

ராஜஸ்தானின் சவாய் மாதோபூா் மாவட்டம், பா்வாரா கிராமத்திலிருந்து மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனுக்கு காரில் திருமண வீட்டாா் சென்று கொண்டிருந்தனா். மணமகன் உள்பட 9 போ் அந்த காரில் பயணித்தனா்.

கோட்டா அருகே சம்பல் ஆற்றின் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காா் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணமகன் உள்பட 9 பேரும் உயிரிழந்தனா். ஆற்றுக்குள் மூழ்கியிருந்த காரிலிருந்து 9 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன. ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நோ்ந்தாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோட்டாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.