சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம், 3 ஆண்டு சிறை – காவல்துறை எச்சரிக்கை

சாலைகள் என்பது ஒவ்வொரு நபருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய இடமாகும். திறன்வாய்ந்த ஓட்டுநர்கள் கூட, விபத்துகளில் சிக்கும் சம்பவங்கள் நாள் தவறாமல் அரங்கேறி வருகின்றன. 18 வயது நிரம்பிய நபர்களுக்கு நாட்டில் வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், பிள்ளைகள் வெகுவிரைவில் வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற அடிப்படையில், 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களிடம் வாகனங்களை பெற்றோர் கொடுக்கின்றனர்.

சிறுவர்கள் நிதானம் இன்றியும், சாலை விதிகளை தெரிந்து கொள்ளாமலும் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதுபோன்ற விதி மீறல்களை தடுக்கும் வகையில் நொய்டா பெருநகர காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். இதன்படி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி வந்தால், அவர்களது பெற்றோருக்கு ரூ.25,000 வரையில் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, நொய்டா நகரில் போக்குவரத்து சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் இத்தகைய நடவடிக்கையை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் அல்லது கார் ஓட்டி வரும் சிறுவர்கள் பிடிபட்டால், இந்திய தண்டனையியல் சட்ட விதிகளின்படி பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களிடம் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக சாலைகளில் ஏறத்தாழ 10,000 வாகனங்கள் கூடுதலாக இயங்கி வருகின்றன என்று காவல் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஆண்டுதோறும் 90 சிறுவர்கள் வாகனங்களை ஓட்டியதாக பிடிபடுகின்றனர். விதியை மீறும் பல நபர்கள் அதனை நிறுத்திக் கொண்டு விட்டனர் என்ற போதிலும், நொய்டா மாநகரில் தற்போது வரை இயங்கி வரும் ஓட்டுநர்களில் 5 முதல் 7 சதவீதம் பேர் சிறுவர்களாக உள்ளனர் என்று காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

பள்ளிகளுக்கு சுற்றறிக்கை :

சிறுவர்கள் வாகனங்களை ஓட்டக் கூடாது என்ற எச்சரிக்கையை பெற்றோருக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், பள்ளிகளிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளின் நிர்வாகத்தினர்களுக்கு இந்த எச்சரிக்கை தொடர்பாக காவல்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் வாகனங்களை ஓட்டக் கூடாது என்ற எச்சரிக்கையை மாணவர்களாகிய நீங்கள் மீறும் பட்சத்தில் உங்கள் பெற்றோர் அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும் அல்லது சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று காவல் துறையினர் அந்த நோட்டீஸில் அறிவுறுத்தி உள்ளனர்.

ஹெல்மெட் கட்டாயம் :

நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் விபத்துகளில், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் தற்போது ஹெல்மெட் அணிய தொடங்கியுள்ளனர் என்றாலும் கூட, அவர்களுக்கு பின்னால் அமர்ந்து வாகனங்களில் வரும் நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது பலருக்கு நினைவிருப்பதில்லை. பைக்கில் இருவருக்கு மேல் செல்லக் கூடாது. அந்த இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.