உக்ரைனில் ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை! ஜோ பைடன் அதிரடி

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இருநாடுகள் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைவாக மதிப்பிடும் தொடர்ச்சியான ரஷ்ய முயற்சிகள் தொடர்பாக சில நபர்களின் சொத்துக்களைத் தடுப்பது மற்றும் சில பரிவர்த்தனைகளைத் தடைசெய்தல் என்ற நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
இதன்படி உக்ரைனில் இரண்டு ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களில் வர்த்தகம் மற்றும் நிதியுதவி மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவு “உக்ரைனின் அந்த பகுதிகளில் செயல்படத் தீர்மானிக்கப்படும் எந்தவொரு நபருக்கும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அதிகாரத்தை வழங்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா மேலும் உக்ரைனை ஆக்கிரமித்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை “சுதந்திரமானவை” என்று அங்கீகரிக்கும் ரஷ்ய அதிபர் புதினின் முடிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.