எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக மாறியுள்ளது! – உதயகுமார் எம்.பி. சாடல்.

“ஆட்சிக்கு வரும் போது பலர் பல்வேறு கதைகளைக் கூறினார்கள். அவர் கண்ட கனவு நனவாகின்றது; இவர் கண்ட கனவு நனவாகின்றது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இப்போது எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக மாறியுள்ளது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

கொட்டகலை, போகாவத்தை பகுதியில் முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“மலையகத்தைப் பொருத்தவரையில் அமைச்சர் திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது மலையக மக்களுக்கு பாரிய அளவில் சேவை செய்தார். தனி வீடுகளைக் கட்டிக்கொடுத்தார்.

அவர் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தார். மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால், அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒரு வீடமைப்புத் திட்டத்தைக்கூட ஆரம்பிக்கவில்லை. மாறாக கனவு கண்டுகொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக மலைநாட்டுப் புதிய கிராமங்கள் வீடமைப்பு அமைச்சுக்கு விருது கிடைத்தது. இப்போது விருது வழங்க வேண்டும் என்றால் வேலை செய்யாமைக்காகவே விருது வழங்க வேண்டும்.

இன்று பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். மூன்று வேளை சாப்பிட முடியாது மிகவும் துன்பப்படுகின்றார்கள். ஆனால், இன்றுள்ளவர்கள் உல்லாசப் பூங்கா அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.