மறுசீரமைக்கப்பட்ட 200 பஸ்கள் மீண்டும் சேவைக்கு…

பழுதடைந்த நிலையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த 200 பஸ்களை மறுசீரமைத்து மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள், புகையிரதப் பெட்டிகள், மோட்டார் வாகனக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்களின் யோசனைக்கமைய, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெக்கப்பட்டது.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை அடுத்து, பஸ் கொள்வனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பஸ் பற்றாக்குறை மற்றும் செலவுக் குறைப்பைக் கருத்திற்கொண்டு, பழுதடைந்த நிலையில் சேவையிலிந்து நீக்கப்பட்ட பஸ்களைப் பழுதுபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக, 273 பஸ்களை மறுசீரமைத்துச் சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை, 2020 டிசெம்பர் மாதத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், பயன்பாட்டிருந்து முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதிலுமுள்ள 107 டிப்போக்களில் காணப்பட்ட 200 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டன. இதற்காக, 136 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கைப் பொதுப் போக்குவரத்துச் சேவைச் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பின் கீழ், இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் லக்திவ பொறியியல் நிறுவனம் ஆகியன இணைந்து, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தன.
இன்றைய நிகழ்வின் போது, மறுசீரமைக்கப்பட்ட பஸ்களைக் கண்காணித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களுடனும் கலந்துரையாடி, அவர்களை ஊக்கப்படுத்தினார்.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் உள்ளிட்ட பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.