கழுதை தேய்ந்து கட்டெறும்பானது அ.தி.மு.க.,: மொத்தமாய் அள்ளியது தி.மு.க.
தமிழகத்தில் மாபெரும் கட்சியாகத் திகழ்ந்த அ.தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்து, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு’ என ஆகியுள்ளது.
ஒரு மாநகராட்சியை கூட அக்கட்சியால் கைப்பற்ற முடியவில்லை. மொத்தம் உள்ள, 21 மாநகராட்சிகளையும் ஆளும் தி.மு.க.யே அள்ளிவிட்டது. நகராட்சி, பேரூராட்சிகளிலும், தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. தனித்து போட்டியிட்ட பா.ஜ., தமிழகத்தில் தலையெடுக்க தொடங்கி உள்ள நிலையில், கமல் கட்சி காணாமல் போனது; ‘தி.மு.க., – அ.தி.மு.க.,வுக்கு மாற்று நானே’ என்று சொன்ன சீமான் கட்சி, பேரூராட்சியில் வெறும் ஆறே இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, 19ம் திகதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
சட்டசபை தேர்தல் வெற்றிக்கு உதவிய, அதே கூட்டணியை கூடவே வைத்து, ஆளும் தி.மு.க., களமிறங்கியது. அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கூட்டணி சிதறியது. ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க.,வையும், பா.ஜ.,வையும் கூட்டணியில் வைத்திருந்த அ.தி.மு.க., தலைமை, இந்த தேர்தலில் கூட்டணிக்கு முக்கியத்துவம் தர மறுத்தது.அதனால், முதலில் பா.ம.க.,வும், தேர்தல் அறிவிப்புக்கு பின், பா.ஜ.,வும் ‘கழன்று’ கொள்ள, த.மா.கா., போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவில், அ.தி.மு.க., களத்தில் இறங்கியது.
60.70 சதவீதம் பதிவு
இக்கட்சி எடுத்த முடிவால், பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., தனித்து போட்டியிடும் சூழல் உருவானது. அதோடு சேர்ந்து, மக்கள் நீதி மய்யம் – நாம் தமிழர் – அ.ம.மு.க., கட்சிகளும் வழக்கம்போல் தனித்து போட்டியிட்டன.மொத்தமுள்ள 12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகளுக்கு, 74 ஆயிரத்து 416 பேர் மனு தாக்கல் செய்தனர். இறுதியாக, 57 ஆயிரத்து 778 பேர் களத்தில் இருந்தனர். மாநகராட்சியில் நான்கு பேர்; நகராட்சிகளில் 18 பேர்; பேரூராட்சிகளில் 196 பேர் என, 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டு உட்பட, ஆறு இடங்களில் வேட்பாளர் மறைவால் தேர்தல் நடக்கவில்லை. மற்ற அனைத்து பதவிகளுக்கும், 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில், மாநிலம் முழுதும் 60.70 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை, 268 மையங்களில் நேற்று பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது.
எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா காலங்களில், யானை பலத்துடன் இருந்த அ.தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலில் மண்ணைக் கவ்வியது. ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய வெற்றி காணவில்லை. தற்போது நடைபெற்ற நகர்ப்புற தேர்தலில், படுதோல்வியை சந்தித்து, கட்டெறும்பாகி விட்டது. ஒரு மாநகராட்சியை கூட, அக்கட்சியால் கைப்பற்ற முடியவில்லை.
அதேநேரத்தில், முதல்வர் ஸ்டாலின் விடுத்த சவால்படி, மொத்தமாக 21 மாநகராட்சிகளையும், தி.மு.க., அள்ளியுள்ளது. அ.தி.மு.க., கோட்டை என கூறப்பட்ட கொங்கு மண்டலத்திலும், தி.மு.க., இம்முறை கொடியை நாட்டியுள்ளது.
இதுமட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் தி.மு.க., அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று இரவு நிலவரப்படி, 7,650க்கும் மேற்பட்ட வார்டுகளை, ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது. தனித்து போட்டியிட்ட பா.ஜ., இத்தேர்தல் வாயிலாக, தமிழகத்தில் தலையெடுக்கத் துவங்கி உள்ளது. நேற்று இரவு வரையான முடிவுகளின்படி, மாநகராட்சிகளில் 22 இடங்களிலும், நகராட்சிகளில் 56 இடங்களிலும், பேரூராட்சிகளில் 230 இடங்களிலும், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் தி.மு.க.,அ.தி.மு.க.,வுக்கு மாற்று சக்தியாக, பா.ஜ., உருவெடுக்க தொடங்கியுள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறிய நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்த கட்சியின் பெயர் கூட, மாநில தேர்தல் கமிஷன் தேர்தல் முடிவுகள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதேபோல, ‘திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று’ என்று முழங்கி வரும் சீமானின் நாம் தமிழர் கட்சியும், இத்தேர்தலில் காணாமல் போனது. அக்கட்சிக்கும் மாநகராட்சி, நகராட்சிகளில் ஒரு வார்டு கூட கிடைக்கவில்லை. பேரூராட்சிகளில் மட்டும், ஆறுதல் அளிக்கும் வகையில், ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அ.தி.மு.க., தலைமை அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகம் முழுதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கடந்த 19ம் திகதி நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, ஆளும் கட்சியான தி.மு.க., கூட்டணி முன்னிலை வகித்தது.மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க., கைப்பற்றியது. அ.தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. இதன் காரணமாக, அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.