‘உக்ரைனில் அமைதியான சூழலே நிலவுகிறது’: டெல்லி திரும்பிய இந்தியர்கள் பேட்டி
உக்ரைனில் தற்போது அமைதியான சூழலே நிலவுவதாக அந்நாட்டிலிருந்து டெல்லி வந்தடைந்த இந்தியர்கள் பேட்டியளித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷியா 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரா்களைக் குவித்துள்ளதால், அங்கு போா்ப் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முயற்சிக்கின்றனா். ஆனால், போதிய விமான சேவை இல்லாததால், அவா்கள் உக்ரைனில் தவிப்பதாக செய்திகள் வெளியாகின.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியாவின் “போயிங் 787′ விமானம், தில்லி விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
அந்த விமானம், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்தை பிற்பகல் 3 மணிக்குச் சென்றடைந்தது. அந்த விமானம் அங்கிருந்து மாணவர்கள் உள்பட 240 இந்தியர்களுடன் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு அந்த விமானம், டெல்லி விமான நிலையத்தை இரவு 11.40 மணிக்கு வந்தடைந்தது.
இந்த விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவர் சிவம் செளதரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உக்ரைனில் அமைதியான சூழலே நிலவுகிறது. கல்லூரி எங்களைத் திரும்பச் செல்லும்படி கூறவில்லை. பல ஊடகங்களின் அறிக்கைகளால் பீதி ஏற்பட்டது. இதனால் எங்கள் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
கிரிஸ் ராஜ் என்ற மாணவர் கூறியதாவது:
நான் உக்ரைன் எல்லைக்கு அருகில் தான் தங்கியுள்ளேன். அங்கு அமைதியான சூழலே நிலவுகிறது. இந்திய தூதரகத்தின் அறிவுரையை ஏற்று நாடு திரும்பினேன் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, உக்ரைனிலுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக பிப்ரவரி 24, 26 தேதிகளில் ஏர் இந்தியாவின் விமானம் செல்லவுள்ளது.