ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லை: காணாமல் போன கமல் கட்சி.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. நேற்று வந்த விஜய்யை கூட கமலால் தொட முடியாதது, அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியலை ஏற்படுத்தப் போவதாக கூறிய கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர் என ஐந்து இடங்களில், விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னையில் 136வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட அறிவுச்செல்வி, அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார்.
விஜய் நேரடியாக பிரசார களத்தில் இறங்காமல், தன் நிர்வாகிகளுக்காக பேட்டி எதுவும் தராத நிலையில், அவரது வேட்பாளர்கள் வெற்றி பெற்றது, கமலுக்கே பாடம் சொல்வது போல அமைந்துள்ளது.
‘பிக்பாஸ்’ மற்றும் சமூகவலைதளத்தில் மட்டுமே வந்தால் போதும் என நினைத்த கமல் கட்சியினர், மக்களோடு மக்களாக கலக்காமல் இருந்தது, தோல்விக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பிரசாரத்தின் போது, ‘தேர்தல் நிதி கொடுங்கள்’ என, மக்களிடம் அவர் கேட்டதும், சிக்கலை ஏற்படுத்தி விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளனர் அவரது கட்சியினர்.