துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் சஃபாயர் தினம் குறித்து பிரதமருக்கு விளக்கம்.
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள சஃபாயர் தினம் (Sapphire Day) தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று (22) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்தனர்.
இலங்கையின் நீல இரத்தினக்கற்களுக்கு (Blue Sapphires) காணப்படும் உலகளாவிய கேள்வியை கருத்திற்கொண்டு நீல இரத்தினக்கற்களுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும்.
அதற்கமைய பெப்ரவரி 26ஆம் திகதி துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு இந்நாட்டின் பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர் மிகவும் மதிப்புமிக்க 25 இரத்தினக்கற்கள் இதன்போது காட்சிபடுத்தப்பட்டன.
இக்கண்காட்சியின் போது இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட சஃபாயர் ஸ்ரீலங்கா (Sapphire Sri Lanka) எனும் சிறப்பு காணொளி காட்சிபடுத்தப்படவுள்ளதாக கௌரவ பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் சுற்றுலா இடங்கள் மற்றும் கலாசார கூறுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த காணொளியானது, சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதுடன், நாட்டைவிட்டு வெளியேறும் போது நினைவுப் பரிசாக இரத்தினக்கல்லை கொள்வனவு செய்யவும் இதனூடாக அழைப்பு விடுக்கப்படுகிறது.
இரத்தினக்கல் கண்காட்சிக்கு முந்தைய தினம் (பெப்ரவரி 25), இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான உலகப் புகழ்பெற்ற நிபுணரான ஹெலன் மோல்ஸ்வொர்த் அவர்களினால் இலங்கையில் உள்ள நீல இரத்தினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற இரத்தினக்கற்கள் குறித்து விரிவுரையொன்று நடத்தப்படவுள்ளது. இதற்காக அனைத்து சர்வதேச ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.