உக்ரைன் தலைநகரில் குண்டுத் தாக்குதல்; இராணுவ நடவடிக்கை ஆரம்பம்.
உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்ட சிறுதி நேரத்தில் இன்று காலை உக்ரைன் தலைநகர் கீய்வ் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நாட்டில் வேறு இடங்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கீவ்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்குள்ள சர்வதேச ஊடகங்களில் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கீவ்வில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே இன்று வியாழக்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கையை ரஷ்ய இராணுவம் ஆரம்பித்துள்ளது. இராணுவ நடவடிக்கைக்கான உத்தரவை உள்ளூர் நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கினார்.
ரஷ்ய தேசிய தொலைக்காட்சியில் இன்று அதிகாலை பேசிய புடின், உக்ரைன் இராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைய வேண்டும். சரணடைய மறுத்து இரத்தக்களறி ஏற்பட்டால் அதற்கு உக்ரைனே பொறுப்பாகும் எனத் தெரிவித்தார். உக்ரேனியப் படைகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லுமாறு புடின் வலியுறுத்தினார்
டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை திங்கட்கிழமை சுதந்திர நாடுகளாக புடின் அங்கீகரித்த நிலையிலேயே அந்தப் பகுதி மீது ரஷ்யப் படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
இவ்வாறான நிலையிலேயே உக்ரைன் தலைநகர் கீய்வ் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.