தமிழரின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன் போராட்டம்.
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்டசிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்களுடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பியும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
காணி அபகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“நிறுத்து நிறுத்து மகாவலி என்ற போர்வையில் தமிழரின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்து”, “தொல்பொருள் என்ற போர்வையில் தமிழரின் நிலங்களையும், கலாசாரத்தையும் அபகரிப்பதை நிறுத்து”, “நிறுத்து நிறுத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழரின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்து” போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செய்தியை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
இதன்போது குறித்த அதிகாரி, நில விவகாரம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் பேசுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் எனவும், அடுத்த வாரத்தில் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோருடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்புக்கு அழைக்கின்றார் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.