”உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள ரஷ்யாவை இந்தியா வலியுறுத்த வேண்டும்” : காங்கிரஸ் வலியுறுத்தல்
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள ரஷ்யாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது-
இந்தியாவுடைய நண்பனாக ரஷ்யா இருந்து வருகிறது. பாதுகாப்பு அடிப்படையில் அந்நாட்டிற்கு ஆதரவாக இந்தியா இருக்க வேண்டும். ஆனால், உக்ரைன் விவகாரத்தில் இந்தியா முற்றிலும் மவுனம் காப்பது வருத்தம் அளிக்கிறது.
காலம் காலமாக இந்தியா கடைபிடித்து வரும் கொள்கையை உக்ரைன் விவகாரத்திலும் நிலை நாட்ட வேண்டும். மற்றொரு நாட்டின் இறையாண்மையில் தலையிடாமல் இருப்பது, மற்ற நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாத நிலை உள்ளிட்டவற்றை இந்தியா கடைபிடிக்கிறது. ஒரு நாட்டின் மக்களரசை மாற்றி அமைக்கும் உரிமை எந்தவொரு நாட்டிற்கும் கிடையாது. இதன் காரணமாகத்தான் தூதரக உறவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அப்படியிருக்கையில் நாம் உலக பிரச்னையில் நம்முடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
ரஷ்யா தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் இந்தியா தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று உக்ரைன் கூறியுள்ளது. இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளின் மீது ஒரு நாடு படையெடுப்பதற்கு நாம் எப்போதும் ஆதரவாக இருந்தது கிடையாது. போர் மற்றும் வன்முறையின் வழியில் ஆட்சியை மாற்றுவதையும் இந்தியா ஆதரித்தது கிடையாது.
எனவே ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தை நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். இரு தரப்பும் சண்டையிட்டுக் கொண்டால் நாம் இரு தரப்பிடமும் கேட்டுக் கொண்டு அமைதியை நிலை நாட்ட முயற்சி செய்யலாம். ஆனால் இங்கு நடப்பது ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு தாக்குதல் நடத்துகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள ரஷ்யாவை இந்தியா வலியுறுத்த வேண்டும். ரஷ்யா விதிகளை மீறுகிறது என்பதை அந்நாட்டிற்கு இந்தியா உணர்த்த வேண்டும்.
சீனா நம்மிடம் விதி மீறி செயல்பட்டால் மற்ற நாடுகள் நமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதனைத்தான் தற்போது உக்ரைன் மக்களும் இந்தியர்களிடம் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். உக்ரைனில் சுமார் 24 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பதாகவும், அவர்களில் 2,300 கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் இன்னும் தீவிரம் அடையாத நிலையில், தாக்குதலை நிறத்திக் கொள்ளுமாறு ரஷ்யாவை உலக நாடுகள் மீண்டும் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.