உக்ரைன் மீதான “முதல்நாள் போர் வெற்றிகரமானது” ரஷ்யா அறிவிப்பு…!
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்து பாதுகாப்பு தேடிக்கொள்ள நினைத்தது. அவ்வாறு உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைந்தால் தனக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷியா எண்ணியது.
இந்த சூழலில் தடாலடியாக உக்ரைன் எல்லையில் 1½ லட்சம் படை வீரர்களையும், போர்த்தளவாடங்களையும் ரஷியா குவித்தது. ஆனாலும் உக்ரைன் மீது போர் தொடுக்க மாட்டோம் என்று ரஷியா தொடர்ந்து கூறி வந்தது. அதை மறுத்த அமெரிக்காவோ, உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுப்பது நிச்சயம் என்று கூறி வந்தது.
இந்த சூழ்நிலையில், உக்ரைனின் லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனி நாடுகளாக அங்கீகரித்து ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டார். அது ரஷிய படைகள் அங்கிருந்து உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க வசதியாகப்போய் விட்டது. இது கிட்டத்தட்ட போரை மறைமுகமாக உறுதி செய்தது.
அந்த நேரத்தில், “உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன்” என்று கூறி ரஷிய அதிபர் புதின் அதிரடியாக போர் பிரகடனம் செய்தார். அத்துடன், “வெளியில் இருந்து இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால், அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததைவிட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடங்கின. இதன்படி கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. பல நகரங்களில் ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும்.
மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை. நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். உக்ரைன் ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். கீவ் நகர் அருகே 14 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது.
நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உக்ரைன் மீதான முதல்நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் படையெடுப்பின் முதல் நாள், 11 விமான நிலையங்கள் உட்பட 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டதாக அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு “முதல்நாள் போர் வெற்றிகரமானது ” என்று தெரிவித்துள்ளது. ரஷ்யா ராணுவம் தொடக்கத்தில் இருந்து இதுவரை 203 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.