மாலியில் இருந்து படைகளை மீளப் பெற்றுக் கொள்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது: அடுத்தது என்ன? – சண் தவராஜா
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியுடனான உறவுகள் சீர்கெட்டு வந்த நிலையில், அந்த நாட்டில் பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனது படைகளை மீளப் பெற்றுக் கொள்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. பெப்ரவரி 17ஆம் திகதி பிரான்ஸ் அரசத் தலைவர் மாளிகையான ‘எலிஸி பலஸ்’ இல் நடைபெற்ற ஊடகர் சந்திப்பின் போது அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அபிரிக்காவின் சாஹெல் பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளான சாட், மொரிற்றானியா மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களை பெப்ரவரி 16ஆம் திகதி இரவு விருந்தில் மக்ரோன் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்த விருந்துக்கு சாஹெல் பிராந்தியத்தில் உள்ள ஏனைய இரண்டு நாடுகளான மாலி மற்றும் புர்க்கினோ பாசோ ஆகியவற்றின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அந்த நாடுகளில் தற்போது இராணுவ ஆட்சி நடப்பதே இதற்கான காரணமாகும்.
மாலியின் தற்போதைய இராணுவ ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தடங்கல்கள் காரணமாகவே படைகளைத் திருப்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்த மக்ரோன், இதனை பிரான்சின் தோல்வியாகக் கருதக் கூடாது என்றார்.
2013இல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக மாலி சென்ற போது, அந்த நாட்டின் அரசாங்கத்தினாலும், மக்களாலும் வரவேற்கப்பட்ட பிரான்ஸ் படைகள் 10 வருடங்களுக்கு இடையில் விரும்பத்தகாதவர்களாக மாறியது எவ்வாறு? மாலியில் இருந்து வெளியேறுவது தமது நாட்டுக்குத் தோல்வி அல்ல என மக்ரோன் கூறும்போதே, அந்த வெளியேற்றம் பிரான்சுக்கு எத்தகைய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது வெளிப்படுகின்றது. சற்றொப்ப 2,400 பேர் வரையிலான படையினரை மாலியின் கோஸ்ஸி, மெனாக்கா மற்றும் காவோ ஆகிய பிராந்தியங்களில் நிலை நிறுத்தியுள்ள பிரான்ஸ் அடுத்த 4 முதல் 6 மாதங்களில் அவற்றை வெளியேற்றிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைப் போன்ற அவசர கதியிலும், அவமானகரமான முறையிலும் தமது படைகள் வெளியேறப் போவதில்லை என்ற செய்தி ஊடாக உண்மையிலேயெ தமக்கு ஏற்பட்ட அவமானத்தை மறைத்துவிட மக்ரோன் முயற்சிக்கிறார் என்பதே வெளிப்படுகின்றது.
அண்மைக் காலத்தில் மாலியின் இராணுவ ஆட்சியாளர்களுக்கும், பிரான்ஸ் அரசாங்கத்துக்கும் இடையில் விரிசல்கள் தோன்றியிருந்தமை அறிந்ததே. மாலி மீதான பொருளாதாரத் தடைகளும், பிரான்சின் தூதுவர் மாலியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் இதன் அண்மைய காட்டிகள். ஆனால், உண்மையான விரிசல் தோன்றக் காரணம் ரஸ்யக் கூலிப் படையான ‘வக்னர் குறுப்’பின் பிரசன்னமே. சற்றொப்ப ஆயிரம் பேர் வரையிலான கூலிப் படையினர் அங்கே நிலை கொண்டுள்ளனர். இவர்கள் இராணுவத் தரப்பின் முக்கிய தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதுடன், பயங்கரவாத முறியடிப்பு தொடர்பான பயிற்சிகளையும் படையினர்களுக்கு வழங்கி வருகின்றனர். இவர்களின் பிரசன்னம் ரஸ்யாவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும் ஒரு உத்தி என்பதாக மேற்குலகில் குற்றஞ் சாட்டப்படுவதை ரஸ்யா தொடர்ந்து மறுத்து வருகின்றது.
இதேவேளை, பெப்ரவரி 4ஆம் திகதி மாலியின் பல இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மக்ரோனின் உருவப் படங்கள் எரிக்கப்பட்டன. பிரான்ஸ் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டோர் ரஸ்ய நாட்டுக் கொடிகளைக் கைகளில் ஏந்தி இருந்தமை கவனத்தை ஈர்த்திருந்தது. இந்தப் பின்னணியிலேயே பிரான்சின் வெளியேற்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரான்சின் 9 ஆண்டு காலப் படை நடவடிக்கைகளில் சாஹெல் பிராந்தியத்தில் 53 பிரான்ஸ் படையினர் கொல்லப்பட்டு இருந்தனர். இவர்களுள் 48 பேர் மாலியில் இடம்பெற்ற படை நடவடிக்கைகளின் போதே கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
‘கொடி அசைந்தததும் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?’ என்ற திரையிசைப் பாடலை நாமறிவோம். அதே போன்றே மாலியிலும், சாஹெல் பிராந்தியத்திலும் பிரெஞ்ச் படைகளின் வருகையின் பின்னர், தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. உள்நாட்டு ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்கு ஆட்களைத் திரட்டுவதை விடவும், அந்நியப் படைகளுக்கு எதிராகத் தேசிய உண்ர்வைத் தூண்டி ஆள் திரட்டுவது இலகுவானது என்பதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. மாலியிலும், அதனை அண்டிய நாடுகளிலும் இதுவே நடந்தது.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகப் படைகள் களத்தில் நிற்கும் போது, தீவிரவாதம் அதிகரிக்கின்றது என்றால் அந்தப் படைகளால் என்ன பயன் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. அந்நிய மண்ணில் படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சில வேளைகளில் நிகழ்ந்துவிடும் தவறுகள், குடிமக்கள் பாதிப்புகள் போன்றவை அந்தப் படைகளுக்கு எதிரான வெறுப்புணர்வை தீவிரவாதிகள் மட்டத்தில் மட்டுமன்றி சாதாரண பொதுமக்கள் மட்டத்திலும் ஏற்படுத்தி விடும். அதுவே மாலியிலும் நிகழ்ந்தது.
பிரெஞ்சுப் படைகள் வெளியேறியதும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றதைப் போன்று திவிரவாதிகளின் கரங்களில் ஆட்சி கிடைத்துவிடும் அபாயம் எதுவும் மாலியில் தற்சமயம் இல்லை. எனினும், பிரெஞ்ச் படைகளின் வெளியேற்றத்தைத் தங்களின் சாதனை எனத் தீவிரவாதிகள் கொண்டாடக் கூடும். இதன் மூலம் தங்கள் செல்வாக்கை அதிகரிக்க அவர்கள் முயற்சி செய்யக் கூடும்.
மறுபுறம், தங்கள் செயல்கள் யாவும் பிரெஞ்ச் படைகளை வெளியேற்றச் செய்யும் உத்தியாகவே கடைப்பிடித்திருந்த இராணுவ ஆட்சியாளர்கள் மாற்றுத் திட்டம் எதைப் பற்றியும் சிந்தித்திருக்க மாட்டார்கள் என நினைப்பது அறிவிழிவு. அத்தகைய மாற்றுத் திட்டம் எதுவென்பதே இன்றுள்ள பெறுமதியான கேள்வி. ‘புலி வருகிறது, புலி வருகிறது’ என்ற கதை போன்று உண்மையிலேயே ரஸ்யா காலிபதிக்க இருக்கிறதா? ‘வாக்னர் குறுப்’ கூலிப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது மாற்றுத் திட்டம் உள்ளதா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சிரியாவில் மேற்கொண்ட படை நடவடிக்கை காரணமாக, தீவிரவாதிகளை முறியடித்து ஆசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாகப் போரை மாற்றியதில் ரஸ்யாவுக்குப் பெரும்பங்கு உள்ளது. இதே போன்றதொரு நடவடிக்கையை மாலியில் ரஸ்யா மேற்கொள்வதாயின் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுக்க வேண்டும். மாலியில் தற்போது உள்ள இராணுவ ஆட்சியாளர்கள் பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றிராத நிலையில் அத்தகையதொரு கோரிக்கை சட்ட பூர்வமானதாக அமையுமா என்ற கேள்வி எழுகிறது.
இயற்கை வளங்கள் மிகந்த நாடாக உள்ள போதிலும், உலகின் வறுமை மிகுந்த நாடுகளுளள் ஒன்றாகவே மாலி இருந்து வருகின்றது. பிரெஞ்சுப் படையின் வெளியேற்றத்தால் இந்த நிலைமை மாறப் போவதில்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஊழலைத் தொலைத்து நாட்டு மக்களுக்குச் சிறந்த ஆட்சியை வழங்குவதொன்றே மாலிக்கும், மாலியின் மக்களுக்கும் நல்லது. பிரான்சின் வெளியேற்றம் அதற்கு வழிகோலும் ஒரு காரணியாக இருந்தால் மகிழ்ச்சியே.