உக்ரைனில் சிக்கியுள்ள கோவை மாணவி.. மகளை பத்திரமாக மீட்டுத்தரக்கோரி பெற்றோர் கோரிக்கை
உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில் மருத்துவம் படிப்பதற்காக சென்ற மகளை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் நகரங்கள் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போர் பிற நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்கிவரும் நிலையில், உக்ரைன் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வான்வெளி பயணத்திற்கு உக்ரைனில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனில் படிப்பதற்காக சென்ற 100-க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் தமிழகம் வர முடியாமல் சிக்கியுள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல இடங்களில் இணைய இணைப்புகள், தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவிகள் தங்களது பெற்றோர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வசித்துவரும் பொன்னுக்குட்டி, தமிழ்செல்வி தம்பதியினரின் மகள் செல்வி பார்கவி, மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் செயல்பட்டுவரும் டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
போர் சூழல் காரணமாக நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாணவி பார்கவி தங்கியிருக்கும் இடத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார். அவருடன் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் சிக்கியுள்ளதாக மாணவி பார்கவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மகளுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தங்கியிருக்கும் பகுதியில் போர் பதற்றம் இல்லை என தங்களுக்கு தைரியம் கொடுத்ததாக கூறிய மாணவியின் பெற்றோர், தங்களது மகளையும் அவருடன் இருக்கும் சக தமிழக மாணவர்களையும் மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். உக்ரைனில் சிக்கித் தவித்து வரும் தமிழக மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவி பார்கவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.