“பட்ஜெட்டுக்கு முன்பு தமிழகத்துக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்’
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து அளிக்க வேண்டும் என்று மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து தமிழக மற்றும் மத்திய நிதியமைச்சர் வட்டாரங்களில் கூறப்பட்டது வருமாறு:
தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் வழங்க வேண்டிய நிதி நிலுவையில் உள்ளது. குறிப்பாக கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக மூன்று முறை தமிழக அரசால் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் குறிப்பாணை சமர்ப்பித்து ரூ. 6,230 கோடி கோரப்பட்டது. மத்திய குழு தமிழகத்திற்கு வந்த பார்வையிட்டும், இந்த நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.
அதே சமயத்தில் தமிழக அரசு வெள்ள நிவாரணத்திற்கு உடனடியாக ரூ. 501.85 கோடி செலவிட்டது. மேலும், தமிழக அரசு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்தும் ரூ. 9,699 கோடியை கரோனா நோய்த் தொற்று நிர்வாக செலவினம் உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்துள்ளது. இதில் 75 சதவீதம் மத்திய பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு எதிர்பார்க்கிறது. இதுபோன்ற நிவாரண நிதிகள் மத்திய அரசிடம் கோரப்பட்டு அவை நிலுவையில் உள்ளன.
மேலும், 2020, ஏப்ரல் முதல் 2021, செப்டம்பர் வரை கடந்த இரு நிதியாண்டிற்கான சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக தமிழகத்திற்கு முறையே ரூ. 2,894 கோடி மற்றும் ரூ.2,049 கோடியாக மொத்தம் ரூ.4,943 கோடி நிலுவையில் இருந்தது. இந்தத் தொகையில் சிலவற்றை மத்திய அரசு சந்தையில் கடனாக பெற்றுக் கொள்ளவும் கூறியிருந்தது. இந்த விவாரங்களை முன்னிட்டு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் என்.முருகானந்தத்துடன் தில்லி வந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என தெரிவிக்கப்பட்டது.
வெள்ள நிவாரணம், ஜிஎஸ்டி போன்ற வகைகளில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு வழங்கப்பட வேண்டும் என தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரியுள்ளார். மேலும் இந்த நிதியை முன்கூட்டி வழங்கினால், அதைப் பொருத்து தமிழக அரசால் நிதி நிலையை தாக்கல் செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக நடப்பு நிதியாண்டில் மார்ச் 31-ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிகுறித்த விவரங்களையும் அந்த அடிப்படையில் தமிழக அரசின் நிதிநிலை தாக்கல் செய்வதற்கு உகந்த வகையில் தமிழக அமைச்சர் கலந்தாலோசித்தாக தெரிவிக்கப்பட்டது. மேலும், வருகின்ற 2022-23 நிதியாண்டில் தமிழக அரசுக்கு கடன் வாங்க மத்திய அரசால் அனுமதிக்கப்படும் நிதியளவு போன்ற விவரங்களையும் தமிழக நிதியமைச்சர், மத்திய நிதி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தாக
தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, மத்திய அரசின் நிதித் துறை செயலர் டி.வி.சோமநாதன், வருவாய் துறைச் செயலர் தருண் பஜாஜ், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் சேத், தமிழக நிதித்துறை துணைச் செயலர் சிபி ஆதித்தன் ஆகியோர் உடனிருந்தனர்.