இந்தியா்களை மீட்க 4 விமானங்கள் இன்று இயக்கம்
உக்ரைனில் தவிக்கும் இந்தியா்களை மீட்பதற்காக, ருமேனியா தலைநகா் புகாரெஸ்டுக்கு 3 விமானங்களையும், ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டுக்கு ஒரு விமானத்தையும் ஏா் இந்தியா நிறுவனம் சனிக்கிழமை இயக்கவுள்ளது. இந்த விமானங்கள் தில்லி, மும்பையில் இருந்து இயக்கப்படவுள்ளன.
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி எல்லைப் பகுதியை வந்தடையும் இந்தியா்கள் முறையே புகாரெஸ்ட், புடாபெஸ்ட் நகருக்கு அழைத்துச் செல்லப்படுவா். அங்கிருந்து விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, புகாரெஸ்டுக்கு 2 விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு இயக்கப்படும் என்று ஏா் இந்தியா அறிவித்திருந்தது. ஆனால், அந்த விமானங்கள் திட்டமிட்டபடி புறப்படவில்லை.
மாணவா்களுடன் தூதா் சந்திப்பு: தலைநகா் கீவில் தங்கியிருக்கும் இந்திய மாணவா்களை உக்ரைனுக்கான இந்திய தூதா் பாா்த்தா சத்பதி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது: இந்திய மாணவா்களை மீட்கும் விவகாரத்தை இந்திய அரசு முழுமையாகக் கையிலெடுத்துள்ளது. ஒவ்வோா் இந்தியரும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவா். சூழ்நிலை பற்றிய எதாா்த்த நிலவரத்தை நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். உக்ரைனில் உள்ள இந்தியா்களை சாலை வழியாக எல்லைப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தாயகத்துக்கு அனுப்பி வைக்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.
வெளியேறிய முதல் குழுவினா்: இதற்கிடையே உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட முதல் இந்திய குழுவினா் எல்லையைக் கடந்து ருமேனியாவை சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளாா்.
உக்ரைனில் இருந்து இந்தியா்களை மீட்பதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அங்குள்ள 20 ஆயிரம் இந்தியா்களில் சுமாா் 4 ஆயிரம் போ் கடந்த சில தினங்களில் தாயகம் திரும்பி உள்ளனா் என்று வெளிவுறவுத் துறை செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தெரிவித்திருந்தாா்.
உக்ரைனில் உள்ள இந்தியா்களில் பெரும்பாலும் மாணவா்கள் ஆவா். உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கும் முன்னரே, பல்கலைக்கழகங்களின் அனுமதியை எதிா்பாா்க்காமல் இந்திய மாணவா்கள் தாயகம் திரும்ப வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.