மாமுல் தர மறுத்த வியாபாரியை கத்தியால் வெட்டிய உதவி ஆய்வாளர்.. பணி இடைநீக்கம் செய்த காவல் ஆணையர்
சேலையூரில் சாலையோரப் பூக்கடை வியாபாரியிடம் மாமூல் கேட்ட காவல் உதவி ஆய்வாளர் மாமூல் தர மறுத்ததால் வியாபாரியை கத்தியால் வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் சானோடோரியம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(50). இவர் கிழக்கு தாம்பரம் பாரதமாதா சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோயில் அருகில் பல வருடங்களாக பூக்கடை நடத்தி வருகிறார். பூக்கடை அருகில் சேலையூர் காவல் நிலைய உதவி மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில் வழக்கம் போல் கடந்த 19ஆம் தேதி வெங்கடேசன் பூக்கடையை நடத்திக் கொண்டிருக்கும் போது சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் இந்த பகுதியில் கடை நடத்த கூடாது அப்படி நடத்த வேண்டுமென்றால் தினமும் மாமூல் 200ரூபாய் தரவேண்டுமென கூறியுள்ளார். மாமூல் தர மறுத்தால் கடையை நடத்த விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளார்.
கடையின் உரிமையாளர் இந்த கடையை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருகின்றோம் தினமும் மாமூல் கேட்டால் நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டு அழுதுள்ளார். இதனால் காவலர் மணிவண்ணன் வெங்கடேசனிடம் சண்டை போட்டு விட்டு சென்று உள்ளார்.
இதையடுத்து மறுநாள் அங்குசென்ற மணிவண்ணன் பூக்கடையில் இருந்த வெங்கடேசனிடம் மாமூல் தராமல் பூக்கடை நடத்துகிறாயா என கூறி கடையை அடித்து நொறுக்கி விற்பனைக்காக வைத்து இருந்த பூக்களை சாலையில் தூக்கி வீசியுள்ளார்.
அப்பொழுது வெங்கடேஷ் காவலரை தடுக்க முயன்ற போது மணிகண்டன் இருசக்கர வாகனத்தின் சாவியில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து வெங்கடேசன் கண்ணத்தில் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் வெங்கடேசன் முகம் முழுவதும் அதிக அளவில் ரத்தம் வந்ததால் அதைக் கண்டதும் காவலர் மணிவண்ணன் அங்கிருந்து தப்பிச் ஓடினார். இதை கண்ட பொதுமக்கள் வெங்கடேசனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முகத்தில் 35 தையல்கள் போடப்பட்டது. பின்னர் இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்ததால் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சென்று புகார் அளித்தபோது அங்கிருந்த காவலர் ஒருவர் நீங்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த வெங்கடேசன் தன்னை வெட்டிய பயிற்சி உதவி ஆய்வாளர் பணி புரியும் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க கூறுகின்றனரே என வேதனையோடு அங்கிருந்து சென்றுள்ளார்.
குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரியது. தாம்பரம் காவல் ஆணையர் ரவி சம்பந்தப்பட்ட பயிற்சி உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை வைத்தார்.
மாமூல் கேட்ட மணிவண்ணன் என்பவர் மீது பாதிக்கப்பட்ட பூ வியாபாரி அளித்த புகார் மீது தீவிர விசாரணை நடத்திய தாம்பரம் காவல் ஆணையர் ரவி S-15 சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இனி காவலர்கள் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரித்துள்ளார்.