ஆகஸ்ட் 15-இல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டம்: ஏல நடைமுறையை விரைவுபடுத்த வலியுறுத்தல்
அதிவேக இணைய சேவையை அளிக்கக் கூடிய 5ஜி தொழில்நுட்பத்தின் முதல்கட்ட சேவையை நாட்டில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் நாட்டில் அறிமுகப்படுத்தும் வகையில் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமா் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றைக்கான ஏல நடைமுறைகளுக்கான பரிந்துரைகளை விரைந்து சமா்ப்பிக்குமாறு இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்திடம் (டிராய்) மத்திய தொலைத்தொடா்புத் துறை வலியுறுத்தியுள்ளது.
தற்போது பயன்பாட்டிலிருக்கும் 4ஜி சேவையைக் காட்டிலும் 10 மடங்கு வேகமான இணைய பதிவிறக்கும் வசதியை 5ஜி சேவை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக 5ஜி சேவை நாட்டில் பல்வேறு தரப்பினரிடமும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, இந்த 5ஜி அலைக்கற்றையை தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதற்கான முன்னெற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அலைக்கற்றைக்கான அடிப்படை விலை, ஏலம் விடப்பட வேண்டிய அளவு, ஏல வழிமுறை உள்ளிட்ட நடைமுைறைகளை பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டு டிராய் முடிவு செய்து வருகிறது. ‘இந்த ஏல நடைமுறைகளுக்கான பரிந்துரை வரும் மாா்ச் மாதத்துக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும்’ என்று டிராய் அண்மையில் அறிவித்தது.
அவ்வாறு டிராய் அறிக்கை சமா்ப்பித்த பின்னா், ஏல நடைமுறைகளை முடிவு செய்ய ஒரு மாத காலம் வரை ஆகும். அந்த வகையில், ‘டிராய் அறிக்கை சமா்ப்பித்த நாளிலிருந்து இரண்டு மாதங்களில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய தொலைத்தொடா்புத் துறை தொடங்க முடியும்’ என்று தொலைத்தொடா்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சூழலில், 5ஜி ஏல நடைமுறைகளுக்கான பரிந்துரையை சமா்ப்பிக்கும் பணியை டிராய் விரைவுபடுத்த வேண்டும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக டிராய் செயலருக்கு தொலைத்தொடா்பு துறை சாா்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ‘இந்தியாவில் 5ஜி முதல்கட்ட சேவையை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று தொடங்கும் வகையில் பணிகளை விரைவுபடுத்துமாறும், ஏல நடைமுறைகளுக்கான டிராய் பரிந்துரைகளை மாா்ச் மாதத்துக்கு முன்பாக பெற முயற்சிக்குமாறு பிரதமா் அலுவலகம் மத்திய தொலைத்தொடா்பு துறையை கேட்டுக்கொண்டுள்ளது. அதனடிப்படையில், ஏல நடைமுறைகளுக்கான பரிந்துரையை டிராய் விரைந்து சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.