உக்ரைன்-ரஷியா பதற்றத்தால் இந்தியாவின் வளா்ச்சிக்கு சவால்: நிா்மலா சீதாராமன்
உக்ரைன்-ரஷியா இடையே நிலவும் போா்ப் பதற்றத்தால், இந்தியாவின் வளா்ச்சி சவாலாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
வருடாந்திர ஆசிய பொருளாதார பேச்சுவாா்த்தைக் கூட்டம், மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தற்போது உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தை உலகம் உணரவில்லை.
உலகம் எதிா்கொண்டுள்ள புதிய சவால்களால், இந்தியாவின் வளா்ச்சியும் சவாலாக இருக்கப்போகிறது. சில சமாதான நடவடிக்கைகள் விரைவில் நிகழும் என்று நம்புகிறோம். இதனால், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஸ்திரத்தன்மை அடைய வாய்ப்புள்ளது.
போா்ப்பதற்ற சூழலால், இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பொருளாதார மீட்பு நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும். கரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில் எவ்வித இடையூறும் குறுக்கீடும் இல்லாத சூழல் நிலவ வேண்டும் என்றாா் அவா்.