தலைநகர் கீவை ரஷ்யா இரவோடு இரவாகக் கைப்பற்றலாம் : உக்ரேனிய அதிபர்
உக்ரேன் தலைநகர் கீவை ரஷ்யா இரவோடு இரவாகக் கைப்பற்றலாம் என உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) அச்சம் தெரிவித்துள்ளார்.
“இன்று இரவு மற்ற நாள்களைப் போல் இருக்காது. அதை வெளிப்படையாகச் சொல்கிறேன்.” என்றார் திரு ஸெலென்ஸ்கி.
இன்று இரவு மிகவும் சிரமமாக இருக்கப்போவதாகவும், நாட்டின் பல நகரங்கள் தாக்குதலை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கீவ் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தலைநகரை இழக்கலாகாது என்றார்.
இன்று இரவு பகைவர் படை தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, முரட்டுத்தனமான, அபாயகரமான, மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தலாம் என்று அவர் எச்சரித்தார்.
எனவே ஆண், பெண் பேதமின்றி அனைவரும் நாட்டைத் தற்காக்கப் போரிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் உட்பட பல ஐரோப்பியத் தலைவர்களுடனும், அமெரிக்க அதிபருடனும் பேசியதாகச் சொன்னார் திரு ஸெலென்ஸ்கி.
போரை முடிவுக்குக் கொண்டுவர கூடுதல் உதவி, ஆதரவு அளிப்பதாய் அவை ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.