உக்ரைனுக்கு மேலும் ரூ. 26 ஆயிரம் கோடி ராணுவ உதவி.
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையில், உக்ரைனுக்கு அமெரிக்கா பண உதவி வழங்கி வருகிறது. ஏற்கனவே 4,500 கோடி ரூபாய் மற்றும் 18 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதல் பணத்தை வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, உக்ரைனுக்கு மேலும் 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரஷியாவின் தாக்குதல் மற்றும் நியாயப்படுத்த முடியாத போருக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில் இந்த ராணுவ உதவிகள் வழங்கப்பட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.