ரஷ்ய – உக்ரைன் போருக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்தில் பிறந்த குழந்தை.
உக்ரைன் – ரஷ்ய மோதல் தீவிரம் அடைந்துள்ளதுடன், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்ய படைகளுக்கு பயந்து மெட்ரோ சுரங்கத்தில் ஒளிந்திருந்திருந்து பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணிக்கு அங்கேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.
உக்ரைன் தலை நகரான கிவ்வில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அவ்வாறு தஞ்சமடைந்திருந்த 23 வயதான பெண் ஒருவருக்கு அங்கேயே போருக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்தில் குழந்தை பிறந்துள்ளது.
கீவ் நகரத்தில் உள்ள மெட்ரோ சுரங்கம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த பொலிஸார் சக மக்களுடன் சேர்ந்து உதவியுள்ளனர்.
இதன்போது பெண்ணுக்கு சுரங்கத்திலேயே பெண் குழந்தை பிறந்துள்ளதுடன், பின்னர், ஆம்புலன்ஸில் தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் அங்கு நலமுடன் இருப்பதாகவும், குழந்தைக்கு மியா என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில்,
‘பூமிக்கு அடியில், எரியும் கட்டிடங்கள் மற்றும் ரஷ்ய டாங்கிகளுக்கு அடுத்ததாக தங்குமிடங்களில் ஒன்றில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவளை சுதந்திரம் என்று அழைப்போம்! உக்ரைனை நம்புங்கள்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.