3வது பெரிய கட்சியா? பல இடங்களில் டெபாசிட்டே காலி.. பாஜக மீது திருமாவளவன் விமர்சனம்
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தங்களை மூன்றாவது பெரிய கட்சி என பாஜக கூறிகொள்வதை விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பல இடங்களில் பாஜக டெபாசிட் தொகையை இழந்துள்ளது என்றும் ஒத்த ஓட்டு பாஜக என்றும் குறிப்பிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் சமய சார்பின்மை, சமூகநீதி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட தலைவர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், எம்எல்ஏக்கள் சின்னத்துரை, அப்துல் சமது, சிபிஐ தேசிய குழு உறுப்பினர் சி. மகேந்திரன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, தமிழக மக்கள் கட்சித் தலைவர் செரீப், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹசன் இமாம், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்தியாவில் மத அரசியலையும், தமிழகத்தில் சாதி அரசியலையும் செய்து இந்துக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டுகிறனர். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே வெறுப்பு அரசியலை ஏற்படுத்தி பாஜக ஆதாயம் அடைய துடிக்கிறது. தமிழக அரசும் காவல்துறையும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறது. எனவேதான் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது
ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதெல்லாம் தாண்டி தற்போதைய தேர்தலில் பாஜக ஒரே ஒரு வாக்கை பெற்றுள்ளனர். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்கின்றனர். திமுகவின் வாக்கு சதவீதம் என்ன, பாஜகவின் வாக்கு சதவீதம் என்ன? உண்மையில் காங்கிரஸ் தான் தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக உள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் வாக்கு சதவீதத்தில் மேல உள்ளன. அதிமுகவும் வாக்குகளை பெற்றுள்ளது. மூன்றாவது கட்சி என்று கூறும் பாஜக பல இடங்களில் டெப்பாசிட் தொகையை இழந்துள்ளனர். செங்கல்பட்டில் ஒரு இடத்தில் வெறும் ஒரு ஓட்டை பாஜக பெற்றுள்ளது. இதுதான் அவர்களின் உண்மையான பலம்’ என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் 800 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி புரிந்தனர், 400 ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி புரிந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் நினைத்திருந்தால் இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றி இருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. இப்போது மத மாற்றம் செய்கிறார்கள் என்பதெல்லாம் அரசியலுக்காக சனாதான கும்பல் செய்யும் சதி வேலை என்று தெரிவித்தார்.