மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு கொடுப்பனவு.
மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட
9736 விவசாயிகளுக்கு சுமார் 36 கோடியே 19 இலட்சம் ரூபாய் நஸ்டஈட்டுக் கொடுப்பனவாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!!
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களது சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு பிரகடனத்திற்கு அமைவாக நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் பல்வேறு துறைசார் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் நலன்சார் பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கு அமைவாக விவசாயிகளின் நலன் நோன்புகை தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனத்தை செலுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் கடந்த 2020 மற்றும் 2021 காலப்பகுதிகளில் பெரும் போக செய்கையின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஸ்ட ஈட்டுக்கொடுப்பனவுகள் எதிர்வரும் (28) திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கி வைக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக துறைசார் அரச அதிகாரிகளை தெளிவூட்டும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (26) மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், விவசாய காப்புறுதிச்சபையின் உயரதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
நாளைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 பகுதிகளில் விவசாயிகளுக்கான நஸ்ட ஈட்டுக் காப்புறுதி வழங்கி வைக்கப்படவுள்ளமை குறித்தும், மேலும் கடந்த காலங்களில் விடுபட்டிருந்த விவசாயிகளுக்கும் இவ்வாறான கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்வாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 9736 விவசாயிகளுக்கு சுமார் 36 கோடியே 19 இலட்சம் 11 ஆயிரத்தி 742 ரூபாய் நஸ்டஈட்டு தொகையாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளதுடன், இவர்களுக்கான நஸ்ட ஈட்டுகொடுப்பனவானது எதிர்வரும் 28.02.2021 திகதி காலை 9.30 மணியிலிருந்து இராஜாங்க அமைச்சரின் தலைமையில் பின்வரும் இடங்களில் வைத்து
வழங்கி வைக்கப்படவுள்ளன.
அதற்கு அமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டபத்தடியிலும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும், கரடியனாறு விவசாய ஆராய்ச்சி மையத்திலும், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலத்தின் கேட்போர் கூடத்திலும் விவசாயிகளுக்கான நஸ்டஈட்டு கொடுப்பனவுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.