மதுரை விமான நிலையத்திலிருந்து புதிய பன்னாட்டு விமான சேவை.. எந்த நாட்டுக்கு தெரியுமா?
மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தினந்தோறும் உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சேவை வழங்கி வருகிறது.
துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு வெளிநாட்டு சேவைகளை வழங்கி வருகிறது. கொரானோ பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டு சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான சேவைகளில் மத்திய அரசு சில தளர்வுகள் அளிக்க முடிவுசெய்துள்ளது.
இருப்பினும்., சமீபகாலமாக மதுரை விமான நிலையத்திற்கு காலையில் வரும் பெங்களூர் விமானம் அதனைத் தொடர்ந்து வருகை தரும் மும்பை, டெல்லி மற்றும் மாலையில் செயல்படும் திருப்பதிக்கு செல்லும் விமானம் ஆகியவை போதிய பயணிகளின் வருகை குறைவினால் ரத்து செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையுடன் 9 முதல் 10 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
தற்போது புதிதாக மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி முதல் அக்டோபர் 29-ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 6 மாதத்திற்கு பயண சேவை தொடங்க உள்ளதாகவும் வாரம் இருமுறை அதாவது (செவ்வாய்கிழமை மற்றும் சனிகிழமை)ஆகிய நாட்களில் செயல்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து மாலை 5.00 மணிக்கு புறப்பட்டு மாலை 6.40 மணிக்கு மதுரை வந்து சேரும் என்றும் அதேபோல் மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் செல்வதற்கு கடும் அவதியுற்ற பயணிகள் இதனால் பயனடைய உள்ளதாகவும்., வர்த்தகம் செய்யும் வியாபாரிகளினால் இந்த புதிய விமான சேவை மூலம் ஏற்றுமதி அதிகளவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.