உக்ரேன் – ரஸ்ய மோதல் ஏன்? என்ன நடக்கும்? : சுவிசிலிருந்து சண் தவராஜா
உக்ரைனில் குண்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன.
தாக்குதல்களை ஆரம்பித்து 5 நாட்களுக்குள்ளாகவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓரிரு இடங்களை ரஸ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதான செய்திகள் வெளியாகியிருந்தன.
அவை மீண்டும் உக்ரேன் இராணுவத்தால் மீட்கப்பட்டதாகவும் , அவற்றை மீண்டும் ரஸ்யா கைப்பற்றி விட்டதாகவும் கூட செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதுநாள் வரை, ரஸ்யா படையெடுத்தால் தாம் உக்ரைனைப் பாதுகாப்போம் என்று உறுதிமொழி வழங்கிய மேற்குலக நாடுகளுள் ஒன்று கூடக் களத்தில் இல்லாத நிலையே உள்ளன. நவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள செய்திகளையும், உக்ரைன் படையினர் பயிற்சியில் ஈடுபடும் காணொளிகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்த மேற்குலக ஊடகங்கள் தற்போது உக்ரைன் மக்களின் துயரங்களைக் காட்சிப்படுத்துவதில் மாத்திரமே குறியாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ரஸ்யா மீது சகட்டுமேனிக்கு அனைத்து விதமான தடைகளை அறிவித்துக் கொண்டிருக்கும் மேற்குலகம், ஈற்றில் நாடுகடந்த உக்ரைன் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவது பற்றிய பேச்சைத் தொடங்கியுள்ளது. மறுபுறம், மேற்குலகு தன்னை முழுவதுமாகக் கைவிட்டு விட்டதாக உக்ரைனின் அரசுத் தலைவர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி பகிரங்கமாகவே அறிவித்துள்ளதையும் பார்க்க முடிந்தது.
இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான படிவத்தில் கையெழுத்திட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதே சமயம் உக்ரைனை இச் சமயத்தில் , ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் என 8 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
உக்ரைன் மீதான துல்லியமான தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கும் ரஸ்யப் படைகள் தமது நோக்கத்தையும் துல்லியமாகத் தெரிந்து கொண்டே தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.
அதே சமயம் உக்ரேனிய இராணுவமும் , உக்ரேனிய மக்களும் ரஸ்யப் படைகளுக்கு எதிராக ஆயுதங்களை கையிலெடுத்துள்ளார்கள். ரஸ்யப் படைகளுக்கு எதிராக போராடியும் வருகிறார்கள். அகதிகளாக உக்ரேனை விட்டு அண்டை நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ரஸ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின், உக்ரைனை ‘இராணுவ மயமாக்கலில் இருந்தும், நவீன நாசிகளின் கைகளில் இருந்தும் விடுவிப்பதே’ தனது படை நடவடிக்கைகளின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்ள முயலக் கூடாது எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்த புட்டின், மேற்குலகு தனது சிவப்புக் கோட்டைத் தாண்ட முயல்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என அடிக்கடி கூறி வந்தார். அவர் கூறியதைச் செயலில் காட்டுவதற்கான களத்தில் இப்போது ரஸ்யப் படைகள் குதித்துள்ளன.
யுத்தம் கொடியது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது அமெரிக்கா மேற்கொண்டாலும், ரஸ்யா மேற்கொண்டாலும் அழிவும், துயரமுமே மிஞ்சும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
உலக வரலாற்றைப் பொறுத்தவரை – ஒரு வல்லரசாக இருந்து கொண்டு – ரஸ்யா மேற்கொண்ட யுத்தங்கள் வெகு சொற்பமே.
ரஸ்யாவோடு ஒப்பிடுகையில் இன்று மல்லுக்கு நிற்கும் அமெரிக்கா உலகின் பல நாடுகளிலும் மேற்கொண்ட யுத்தங்கள் பேரழிவைத் தந்திருக்கின்றன. அதேவேளை, வேற்று நாட்டின் மீது படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னுதாரணங்களையும் அமெரிக்கா தேவைக்கும் அதிகமாகவே வழங்கியுள்ளது.
யூகோஸ்லாவியா மீது அமெரிக்கா தலைமையில் மேற்குலகம் மேற்கொண்ட யுத்தத்தை, புட்டின் தனது உரையிலும் சுட்டிக்காட்டி இருந்தார்.
ரஸ்யாவின் தொடர்ச்சியான வேண்டுகோள்களும், அறிக்கைகளும் மேற்குலகினால் கவனத்தில் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.
1991ஆம் ஆண்டு நிலைமையோடு ஒப்பிட்டு ரஸ்யாவைப் புரிந்து வைத்திருக்கும் மேற்குலகின் கொள்கை வகுப்பாளர்கள் தற்போது ரஸ்யா மேற்கொண்டுள்ள படை நடவடிக்கையால் அதிர்ந்து போயிருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தற்போதைய படையெடுப்பின் ஊடாக, தனது நாட்டின் பாதுகாப்புக்காக எந்தவொரு இழப்பையும் சந்திக்கத் தயார் என்ற செய்தியை புட்டின் அழுத்தமாகச் சொல்லி உள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாகவே பல்வேறு காரணங்களுக்காக மேற்குலகின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்ற நாடுகளுள் ஒன்றாக ரஸ்யா இருந்து வருகின்றது.
அமெரிக்க அரசுத் தலைமைப் பீடத்தில் ஆட்கள் மாறினாலும் மாறாத ஒன்றாக ரஸ்யா மீதான பொருளாதாரத் தடைகள் இருந்து வருகின்றன. ‘ரஸ்யப் படையெடுப்பு’ என்ற பெயரில் மேலும் பல பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட உள்ளதாகச் செய்திகள் ஏலவே வெளியாகியிருந்தன.
அது மாத்திரமன்றி பெரும் பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்ட யேர்மனிக்கான எரிவாயு விநியோகத் திட்டம் கூடக் கைவிடப்படும் வாய்ப்பும் இருந்தது.
ரஸ்யாவின் ராஜதந்திரிகள் மாத்திரமன்றி, ரஸ்ய ஊடகங்கள் கூட மேற்குலகில் இருந்து விரட்டப்பட வாய்ப்பு உள்ளது உள்ளிட்ட பல விடயங்களைத் தெரிந்திருந்தும் புட்டின் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது ‘இழப்பதற்கு இதற்கு மேலும் எதுவும் இல்லை’ என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது.
1991இல் சோவியத் ஒன்றியம் சிதைவடைந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் சீர்குலைந்திருந்த ரஸ்யாவையை இன்றும் விரும்பும் அமெரிக்காவால், ரஸ்யா வல்லரசாக மாறுவதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. தன்னளவில் வல்லரசாக மாறுவது மட்டுமன்றி, சோவியத் ஒன்றியத்தின் முன்னைநாள் குடியரசுகளையும் தனது நட்பு நாடுகளாக மாற்றி வரும் புட்டினின் செயற்பாடுகள் அமெரிக்காவின் ‘ஒற்றைமைய உலகு’ என்ற கோட்பாட்டிற்குப் பெரும் சவாலாக விளங்கி வருகின்றது.
வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுவதையே கொள்கையாகக் கொண்டுள்ள அமெரிக்கா, ரஸ்யாவிடம் 1991இல் வழங்கிய வாக்குறுதி ஒன்றையும் காற்றில் பறக்க விட்டது.
நேட்டோ எனப்படும் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புக் கழகத்தில் முன்னைநாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைத்துக் கொள்வதில்லை என்ற வாக்குறுதியை மீறி, ஒவ்வொரு நாடாக ரஸ்யாவிற்கு எதிரான அணியில் சேர்த்துக் கொண்டு வருவதை ஒரு கட்டத்தில் ரஸ்யா எதிர்க்கத் தொடங்கியது.
இதன் விளைவாக 2008இல் ஜோர்ஜியாவில் ஒரு படை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய தேவைக்கு ரஸ்யா ஆளானது. அதன் விளைவாக, ஜோர்ஜியாவின் மாகாணங்களாக விளங்கிய தெற்கு ஒசற்றியா மற்றும் அப்காசியா ஆகிய பிரதேசங்களைத் தனிநாடாக அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு ரஸ்யா தள்ளப்பட்டது.
கிட்டத்தட்ட இதே போன்றதொரு நிலையே உக்ரைனிலும் இடம்பெற்றுள்ளது.
டொன்பாஸ் பிராந்தியம் என வர்ணிக்கப்படும், ரஸ்ய எல்லையோரப் பிராந்தியம் 2014இல் உக்ரைனில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் விளைவாக பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவானது. ரஸ்யாவுடன் இணக்கமான உறவுகளைப் பேணிவந்த விக்டர் யனுக்கோவிச் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, மேற்குலகிற்கு ஆதரவான அரசாங்கம் பலாத்காரமாக அமைக்கப்பட்டபோது. ரஸ்யாவால் அதனைத் தடுக்க முடியவில்லை.
‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் புலி மனிதனைக் கடித்த கதை’ போன்று தனது கொல்லைப்புறம் வரை நேட்டோ விஸ்தரிக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே புட்டின், கிரிமியாவை ரஸ்யாவோடு இணைக்கும் முடிவை நோக்கிச் செல்லவேண்டி இருந்தது.
உக்ரைன் விடயத்தில் ஆரம்பம் முதலே இராஜதந்திர அணுகுமுறைக்கு வாய்ப்பை வழங்கிவந்த ரஸ்யா, ஒரு கட்டத்தில் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.
ரஸ்யாவின் அணுகுமுறையை பலவீனத்தின் வெளிப்பாடு எனக் கருதிச் செயற்பட்டு வந்த மேற்குலகம், தனது பலத்தைக் கொண்டு ரஸ்யாவைப் பணியவைத்து விடலாம் எனக் கருதியே செயற்பட்டு வந்தது.
ஆனால், உலகின் பொருளாதார வல்லரசாக உதயமாகிக் கொண்டிருக்கும் சீனாவுடன் நட்பை வளர்த்துக்கொண்ட ரஸ்யா, தற்போது அதிரடியாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை உலகின் எதிர்காலச் செல்நெறியை மாற்றியமைக்கும் தன்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் சிதைவுடன் காணமற் போன ‘பனிப் போர்’ யுகம் மீண்டும் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
ரஸ்யாவின் முடிவை சீனா ஆதரிக்காது , உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெள்ளிக் கிழமை கொண்டு வந்த தீர்மானத்தை . அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவைப் போலவே , சீனாவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
ரஸ்யாவின் நட்பு நாடுகள் எனக் கருதப்படும் கியூபா, வெனிசுவேலா, சிரியா போன்றவை ரஸ்யாவுக்கு ஆதரவாகக் குரல் தந்துள்ளன. வெளிப்படையாக அறிவிக்காமல் போனாலும் மேலும் ஒருசில நாடுகள் ரஸ்யாவின் நடவடிக்கையை ஆதரிக்கும் மனோநிலையிலேயே உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அவை எண்ணிக்கையும், பலத்தின் அடிப்படையிலும் சிறிய நாடுகளாக இருந்தாலும் கூட, கருத்தியல் அடிப்படையில் அணிதிரளும் போக்கை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய போக்கின் விளைவு என்னவாக மாறும் என்பதை உலகம் அறியும். மீண்டும் ஒரு ஆயுதப் போட்டா போட்டியினுள் உலகம் பிரவேசிப்பதற்கான அறிகுறியே இது.
இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் வேளையில் உக்ரைனில் மோதல்கள் மேலும் அதிகரித்து இருக்கலாம்.
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துவிட்டு, பெலாரஸ் நாட்டின் தலைநகருக்கு ஒரு தூதுக்குழுவையும் ரஸ்யா அனுப்பி வைத்துள்ள நிலையில், உக்ரைன் தரப்பில் இருந்தும் ஒரு தூதுக்குழு அந்த நாட்டிற்குச் சென்று முதற் கட்ட பேச்சு வார்த்தையில் பங்கு பற்றி திரும்பியுள்ளனர்.
‘புட்டினின் முதன்மை இலக்கு நானே’ என ஸெலன்ஸ்கி அறிவித்துள்ள நிலையில் சில வேளையில் , சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராகத் தற்போது பதவி வகிப்பவரும், பிரான்ஸ் அரசுத் தலைவருமான இம்மானுவேல் மக்ரோன் அவர்களின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்து ரஸ்யாவின் படை நடவடிக்கைகள் – தற்காலிகமாகவேனும் – இடைநிறுத்தப்படலாம்.
இது போன்ற மேலும் பல ஊகங்களுக்கு இடமிருக்கின்றது. நேற்று போல இன்றில்லை. இன்று போல் நாளை இல்லை எனும் நிலையில் தினசரி மாறிவரும் போர்க்கள நிலவரங்கள் , என்ன ஆகுமோ என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.