மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: பொதுக் குழு உறுப்பினரில் இருந்து முதல்வர் வரை.. கடந்து வந்த அரசியல் பாதை
தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நாளில் அவர் கடந்து வந்த அரசியல் பாதையை தற்போது பார்க்கலாம்…
கருணாநிதி – தயாளு அம்மாளின் மகனாக, 1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்த ஸ்டாலினுக்கு, இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் 1967ம் ஆண்டிலேயே, தனது 14வது வயதில் அரசியலில் நுழைந்த ஸ்டாலின், திமுகவுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக பரப்புரையைத் தொடங்கினார். அதன்பின்னர் 1973ம் ஆண்டு திமுக பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1975ல் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது, சிறையில் அடைக்கப்பட்டு போலீசாரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஸ்டாலின், 1984ம் ஆண்டு திமுகவின் மாநில இளைஞரணி செயலாளாராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தனது முதல் தோல்வியை, வெற்றிகளுக்கான படிக்கட்டாக எடுத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின், 1989ல் மீண்டும் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட்டு, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
பின்னர் 1996 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் இரண்டாவது முறையாக வெற்றியை வசப்படுத்தினார். அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
அப்போது சென்னையில் நிலவிய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா பல்கலைக்கழகம், எழும்பூர் என 10 இடங்களில் மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டது. அதன்பிறகு 2001 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் வென்று மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வானார். அதே ஆண்டு மீண்டும் சென்னை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், 2002ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தால் அவர் மேயர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. 2006ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்ச்சி துறை அமைச்சரானார். பின்னர் 2008ம் ஆண்டு திமுகவின் பொருளாளராகவும் தேர்வானார் ஸ்டாலின். தொடர்ந்து 2009ல் முதல் துணை முதலமைச்சராகவும் ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். உள்ளாட்சித் துறையில் அப்போது பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார்.
2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு, ஒற்றை நபராக “நமக்கு நாமே” தேர்தல் பரப்புரை மேற்கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மக்கள் நலக்கூட்டணியினர் வாக்குகளை பிரித்தபோதிலும், 98 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றிபெறுவதற்கும், ஆட்சிக்கட்டிலுக்கு அருகேசெல்லவும் வித்திட்டார்.
அதன்பின்னர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஸ்டாலின் திமுக செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திமுக தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின், போட்டியின்றி அக்கட்சியின் தலைவரானார். 2021ம் ஆண்டில் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலின், இம்முறை முதலமைச்சர் அரியணையையும் தன்வசமாக்கினார்.